தி.மலை மாவட்டத்தில் தீவிரமடையும் கரோனா பாதிப்பு : மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தி.மலை மாவட்டத்தில் தீவிரமடையும் கரோனா பாதிப்பு : மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதி தீவிரமாகப் பரவி வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்கிறது.

ஏப்ரல் 6-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் 44 பேருக்கு தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு என்பது 19,883-ஆக இருந்தது. இதில் 19,408 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அன்றைய காலக்கட்டத்தில்188 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். 287 பேர் உயிரிழந்து இருந்தனர்.

இரட்டை இலக்கு எண்ணிக்கையில் இருந்த பாதிப்பு, மூன்று இலக்கு எண்ணிக்கையை தொட்டது. அதிலும் கடந்த 2 நாட்களாக கரோனா தொற்றின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. 377 மற்றும் 370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 22,518-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சிகிச்சை முடிந்து 20,516 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1,707 பேர் சிகிச்சை பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகள் மற்றும் கரோனா கேர் மையங்களில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 11 அரசு மருத்துவமனைகள், ஒரு தனியார் மருத்துவமனை, 2 கரோனா கேர் மையங்களில் 1,470 படுக்கைகள் இருப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கடந்த 22-ம் தேதி தெரிவித்திருந்தார்.

தற்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் நோயாளிகள் அனைவருக்கும் படுக்கைகள் கிடைக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு தடை இல்லாமலும், தாமதம் இல்லாமலும் சிகிச்சை அளிக்க படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது, “வட மாநிலங்களில் நிலவும் அசாதாரன சூழ்நிலையை போல் தமிழகத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் துரிதமாக செயல்பட்டு, மருத்துவமனைகள் மற்றும் கரோனா கேர் மையங்களில் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இது குறித்து சுகாதாரத் துறை வட்டாரத்தில் கேட்டபோது, “மருத்துவமனைகளில் தற்போது வரை படுக்கைகளுக்கு நெருக்கடி ஏற்படவில்லை. கரோனா நோயாளிகள் அனைவருக்கும் தடையின்றி உடனுக்குடன் சிகிச்சை கிடைக்கவும், அவர்களுக்கான படுக்கைகள் வசதி கிடைக்கவும் முனைப்புடன் செயல்படுகிறோம்” என்றனர்.

இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு ஓரே நாளில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 295-ஐ எட்டியது. கடந்த 2 வாரங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in