Last Updated : 25 Apr, 2021 07:06 PM

 

Published : 25 Apr 2021 07:06 PM
Last Updated : 25 Apr 2021 07:06 PM

முழு ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து, ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்

முழு ஊரடங்கு காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வாகன போக்குவரத்து இன்றியும், ஆட்கள் நடமாட்டமின்றி அனைத்துச் சாலைகளும் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. இதையொட்டி நேற்று சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வாகன போக்குவரத்து இன்றியும், ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் முக்கிய சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் தவிர மற்ற அனைத்துக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. பால் விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது. வேலூரில் ஒரு சில உணவகங்களில் பார்சல் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது. அம்மா உணவகம் வழக்கம்போல் இயங்கியது.

வேலூர் மாவட்டத்தில் எப்போதும் பரப்பரமாக காணப்படும் அண்ணாசாலை, ஆற்காடு, ஆரணி சாலை, காட்பாடி சாலை, லாங்கு பஜார், மெயின் பஜார், காந்தி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் ஆரவாரமின்றி அமைதியாக காணப்பட்டது. மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், பலசரக்கு கடைகள், ஜெனரல் ஸ்டோர்ஸ் ஆகியவை மூடப்பட்டிருந்தன.

வேலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இல்லாததால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. காட்பாடி ரயில் நிலையம் வழியாக குறைவான ரயில்கள் இயக்கப்பட்டதால் வெளி மாநிலம் செல்லும் வட மாநில தொழிலாளர்கள் நீண்ட நேரம் ரயில் நிலையத்திலேயே காத்திருந்து ரயில்கள் வந்த உடன் அதில் ஏறிச் சென்றனர்.

அதேபோல, காட்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள் ரயில் நிலையம் வர பேருந்து வசதி இல்லாததால் நீண்ட தொலைவில் இருந்து வட மாநில இளைஞர்கள் ரயில் நிலையத்துக்கு நடந்தே வந்தனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் 50 சதவீதம் ஆட்களுடன் நடைபெற்றது.

ஏப்ரல் 26-ம் தேதி முதல் தமிழகத்தில் கோயில்களை திறக்க அனுமதியில்லை என்பதால் ஒரு சில கோயில்கள் இன்று காலை திறக்கப்பட்டன. அங்கு பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆகம விதிப்படி கோயில் குருக்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டன.

ஒரு சில கோயில்களில் இன்று அதிகாலை திருமணம் நடைபெற்றது. அங்கும் குறைந்த அளவிலான மக்கள் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமண விழாவில் பங்கேற்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்கடை, காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் மூடப்பட்டிருந்தாலும் கிராமப்பகுதிகளில் இறைச்சி, காய்கறி விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது.

வேலூர் மாநகராட்சிப்பகுதியில் அதிகாலை நேரங்களில் இறைச்சி விற்பனை களைக்கட்டியது. ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பதால் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் இறைச்சியின் விலை 10 முதல் 15 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது. விலை ஏற்றம் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத இறைச்சிப்பிரியர்கள் அதிக விலையை கொடுத்து ஆட்டிறைச்சி மற்றும் கறிக் கோழியை வாங்கிச்சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணத்தால் சனிக்கிழமை இரவு 10 மணிக்கே காவல் துறையினர் நகரின் முக்கிய சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவசியம் இல்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர். வேலூர் மாவட்டத்தில் 46 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு எஸ்பி செல்வகுமார் தலைமையில் 700 காவலர்கள் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டனர். தூய்மைப்பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் பயன்பாட்டுக்காக வேலூர் நகர் பகுதியில் மட்டும் அரசு பேருந்து இன்று இயக்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 38 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 450 காவலர்கள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொது முடக்கம் காரணமாக உணவின்றி சாலைகளில் தவித்த ஆதரவற்றவர்களுக்கு எஸ்பி.டாக்டர். விஜயகுமார் உணவு வழங்கினார். பொது முடக்கத்தை யொட்டி மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மாவட்டம் முழுவதும் இன்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டும் இயங்கின. சரக்கு வாகனங்கள் செல்ல தடையில்லாததால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுங்சாலையில் கன்டெய்னர் லாரிகள், சரக்கு வாகனங்கள் தடையில்லாமல் சென்றன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 33 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 550 காவலர்கள் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டனர். அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய பேருந்து நிலையங்கள், மாவட்டம் முழுவதும் உள்ள மார்க்கெட் பகுதிகள், பஜார் பகுதிகள், முக்கிய சாலைகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

முக்கிய சாலைகளின் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் அந்த வழியாக அவசியம் இல்லாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். அனாவசியமாக சுற்றித்திரிந்தவர்களை காவலர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு திங்கள்கிழமை (நாளை) காலை 4 மணியுடன் நிறைவுப்பெறுகிறது. கிட்டத்தட்ட 30 மணி நேரம் பொது மக்கள் வீடுகளில் முடங்கியதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x