தமிழகத்தில் கடந்த 17 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சிக்கியவர்கள் 5,63,658 பேர்: சென்னையில் 19,541 பேர் சிக்கினர்

தமிழகத்தில் கடந்த 17 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சிக்கியவர்கள் 5,63,658 பேர்: சென்னையில் 19,541 பேர் சிக்கினர்
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த 17 நாட்களாக முகக்கவசம் அணியாயமல் சிக்கியவர்கள் நேற்றுவரை 5 லட்சத்து 63 ஆயிரத்து 658 பேர், சென்னையில் 19,541 பேர் சிக்கியுள்ளனர்.

கரோனா இரண்டாவது அலை பரவலால் தற்போதுவரை 1 லட்சம் பேர் வரை வீட்டுத்தனிமையிலும், மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினசரி தொற்று எண்ணிக்கை 9% வரை அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் நேற்று 14,852 ஆக பதிவானது, சென்னையில் தமிழகப் பரவலில் 25% என்கிற அளவுக்கு உள்ளது.

கரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலையின் தாக்கம் மும்மடங்கு வேகத்திலும், அதன் இரட்டிப்பாகும் தன்மை 8 நாட்களுக்கும் குறைவாகவும் உள்ளது.

இதனால் நோய்த்தொற்றின் வேகம் கடுமையாக அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுபடுத்த முகக்கவசம், தனிமனித விலகல் கடுமையாக அமலாக்கப்பட்டது. முகக்கவசம் ஒன்றே கரோனா பரவலைத் தடுக்கும் என்பதால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது.

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் என அறிவிக்கப்பட்டது. எச்சில் துப்புதல், தனிமனித விலகல் இல்லாமல் நடந்தால் 500 அபராதம், நிறுவனங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் 5000 முதல் 10,000 வரையும் அதையும் மீறி நடந்தால் சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் காவல்துறை, மாநகராட்சி, நகராட்சி, வருவாய்த்துறை ஊழியர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது, இந்த நடைமுறை அமலான ஏப்.8 லிருந்து நேற்றுவரை (24/4) தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்த 5 லட்சத்து 63 ஆயிரத்து 658 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை தனிமனித விலகலை கடைபிடிக்காத 17 ஆயிரத்து 398 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் முகக்கவசம் அணியாமல் கடந்த 17 நாட்களில் 19541 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ.36,80,300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித விலகலை கடைபிடிக்காத 272 பேரிடமிருந்து ரூ.1,30,600 வசூலிக்கப்பட்டது.

நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 24 ஆயிரத்து 995 பேர் மீதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத 628 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 1178 பேரிடம் ரூ.2,11,400 வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித விலகலைக் கடைபிடிக்காதவர்கள் 26 பேரிடம் ரூ.13000 வசூலிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in