

முழு நேர பொது ஊரடங்கு நாளான இன்று ஆதரவற்றோர், ஏழை- எளிய மக்கள் தங்கள் பசியைப் போக்கிக் கொள்ள அம்மா உணவகங்கள் பெரிதும் உதவின என்றால் மிகையல்ல.
திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வளாகம், ஜான் பஜார், இபி ரோடு, மரக்கடை குப்பாங்குளம், அரியமங்கலம் ஜெகநாதபுரம், கல்கண்டார்கோட்டை, ஜங்ஷன் ராக்கின்ஸ் ரோடு, தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை, புத்தூர் ஈவெரா சாலை, உறையூர் சாலை ரோடு ஆகிய 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சாலையோர தள்ளுவண்டி கடைகளில்கூட இட்லி ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அரசு நடத்தி வரும் அம்மா உணவகங்களில் காலை வேளையில் இட்லி ரூ.1-க்கும், பிற்பகலில் தயிர் சாதம் ரூ.3-க்கும், சாம்பார் அல்லது வெரைட்டி சாதம் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முழு நேர பொது ஊரடங்கு இன்று அமலில் இருந்ததால் சாலையோர உணவகங்கள், டீ கடைகள், பெட்டிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், திறந்தக்கப்பட்டிருந்த சில ஹோட்டல்களிலும் தனியார் உணவு நிறுவன செயலி மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பார்சலாக வழங்கப்பட்டது.
இந்தநிலையில், ஆதரவற்றோர் மற்றும் ஏழை, எளியோருக்கு வழக்கம்போல் மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கி அம்மா உணவகங்கள் பேருதவியாக இருந்தன என்றால் மிகையல்ல.
மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் சமூக இடைவெளியுடன் உணவருந்த மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏற முந்தைய நாள் இரவில் இருந்து காத்திருந்தவர்களும், திருச்சிக்கு ரயிலில் வந்திறங்கி அங்கிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் ரயில் நிலைய வளாகத்திலேயே காத்திருந்தவர்களும் ஜங்ஷன் ரவுண்டானா அருகேயுள்ள அம்மா உணவகத்தில் உணவருந்தி சென்றனர்.
இவ்வாறு முழு நேர பொது ஊரடங்கு நாளில் ஆதரவற்றோர், ஏழை- எளிய மக்கள் தங்கள் பசியைப் போக்கிக் கொள்ள அம்மா உணவகங்கள் பெரிதும் உதவின என்றால் மிகையல்ல.