Published : 25 Apr 2021 05:24 PM
Last Updated : 25 Apr 2021 05:24 PM

மாநில அரசைக் கேட்காமல் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசு: எதேச்சதிகார நடவடிக்கை: கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநில அரசின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாறாக எதேச்சதிகாரமாக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடுவதா என கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. வரும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் இன்னும் நிலைமை மோசமடையும் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. இந்த காலகட்டத்தில் மிக அதிகமான எண்ணிக்கையில் கரோனா நோயாளிகள் வரக்கூடும்.

கரோனா இரண்டாவது அலை பாதிப்பு, அதிகமான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையை உருவாக்குகிறது என செய்திகள் காட்டுகின்றன. வட மாநிலங்கள் பலவற்றிலும் மருத்துவமனை மற்றும் ஆக்சிஜன் கட்டமைப்புகள் இல்லாததால் கரோனா சிகிச்சை தருவதிலும், இதர நோய்களுக்கு சிகிச்சை தருவதிலும் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள கட்டமைப்பே மக்களை பாதுகாப்பதற்கு உதவி வருகிறது.

ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் மருத்துவ ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடும் நடவடிக்கையை மத்திய அரசு தன்னிச்சையாக மேற்கொள்வதாக செய்திகள் காட்டுகின்றன. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் திருப்பிவிடுவதை எதிர்த்துள்ள தமிழக முதல்வர், தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசு இதுபோன்ற விசயங்களில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, பாதிப்பை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதோடு, மாநில அரசின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாறாக எதேச்சதிகாரமாக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடும் மோடி அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, தமிழக அரசிடமிருந்து கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஆக்சிஜனை விடக் கூடாது எனவும், தமிழகத்தின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக முதல்வர் கூடுதலாக கேட்டுள்ள ஆக்சிஜனை உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x