

காணாமல் போன குமரி மீனவர்கள் 11 பேரை கண்டுபிடிப்பதற்கு இந்திய கடற்படை மூலமும், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியும் தேடுகிற பணியை தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கை:
“கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி 11 மீனவர்கள் பதிவு செய்யப்பட்ட நவீன மீன்பிடி படகு மூலமாக ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றார்கள். மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடி படகுகள் காணாமல் போனதாக ஏப்ரல் 24 அன்று செய்திகள் வந்துள்ளன.
இந்தச் செய்தியின் அடிப்படையில் குளச்சலில் உள்ள மீன்வளத்துறை துணை இயக்குனர் தமிழக மீன்வளத்துறை ஆணையருக்கு காணாமல் போன மீனவர்கள் குறித்து கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும், காணாமல் போன தேங்காய்ப்பட்டினத்தை சேர்ந்த ஜோசப் பிராங்க்ளின் உள்ளிட்ட 11 மீனவர்களை உடனடியாக தேடுவதற்கு கிழக்கு, மேற்கு பகுதியிலுள்ள கடற்படை காவல்துறையினருக்கு தமிழக அரசு ஆணையிட்டு உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதற்கு இந்திய கடற்படை மூலமும், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியும் தேடுகிற பணியை தீவிரப்படுத்த வேண்டும். மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் காணாமல் போனதால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.