Published : 25 Apr 2021 12:35 PM
Last Updated : 25 Apr 2021 12:35 PM

தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை வரலாம்; ஸ்டெர்லைட் ஆலையை அரசு பயன்படுத்த வேண்டும்: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல் 

சென்னை

கரோனாவை கட்டுப் படுத்துவது, ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை கரோனா முடியும் வரை ஆக்சிஜன் தயாரிக்கவும் ஆலோசித்து உரிய முடிவுகளை எடுத்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:

ஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த உக்கிரமான இரண்டாவது அலை மக்களை மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழகத்திலும் பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதிலும் கரோனா சிகிச்சைக்குரிய மருந்துகளுக்கும் , ஆக்சிஜனுக்கும், தடுப்பூசிகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ரெம்டிசிவிர் உள்ளிட்ட மருந்துகளும், ஆக்சிஜனும் சமூக விரோத சக்திகளால் பதுக்கப்படுகின்றன. விலைகளும் மிக அதிகமாக உயர்ந்துள்ளன.

இந்நிலையில், செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோ டெக் (HLL Biotech) நிறுவனம் மூலம் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருப்பது வரவேற்புக்குரியது.

பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கோவேக்சின் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கிட வேண்டும். மத்திய அரசு எச்எல்எல் பயோ டெக் நிறுனத்தில் உற்பத்தியை தொடங்கிட தயங்கும் பட்சத்தில் , மாநில அரசே அந்நிறுவனத்தை ஒப்பந்த முறையில் ஏற்று, கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிட வேண்டும். அதே போன்று தமிழக அரசு கிண்டி கிங்ஸ் நிறுவனத்திலும் கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்யலாம்.

தமிழகத்தில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோர் 6.27 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்திட வேண்டும். இவர்கள் அனைவருக்கும் 2 தவணைகள் செலுத்துவதற்கு சுமார் 12.5 கோடி தவணைக்கான கரோனா தடுப்பூசி மருந்துகள் தேவை.

கோவிஷீல்டு, கோவேக்சின், போன்ற தடுப்பூசிகளை அந்நிறுவனங்களிடமிருந்து முறையே ரூ 400 மற்றும் ரூ 600 என்ற விலைகளை கொடுத்து சில கோடி தவணைகள் வாங்கிடவே, சுமார் ரூ.2400 முதல் 3500 கோடிக்கு மேல் செலவாகலாம். உடனடியாக நமக்கு அவ்வளவு தவணைகள் தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது.

இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை தமிழக அரசே சென்னை கிண்டியில் உள்ள ‘கிங்ஸ் நிறுவனம்’ மூலமும், செங்கல்பட்டிலுள்ள எச்எல்எல் பயோ டெக் நிறுவனம் மூலமும் உற்பத்தி செய்தால், குறைந்த விலையில் உற்பத்தி செய்வதோடு, தேவையான மருந்தை குறுகிய காலத்திற்குள் உற்பத்தி செய்திட முடியும்.

எச்எல்எல் பயோ டெக் நிறுவனத்தில் முதலீடு செய்ய மத்திய அரசு தயங்குகிறது. அங்கு தடுப்பூசி உற்பத்தி செய்து கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட ஒப்பந்தப் புள்ளியை 26.03.2021 அன்று கோரியுள்ளது. இது வரை எந்த நிறுவனமும் அங்கு உற்பத்தியை தொடங்கிட முன்வரவில்லை. இதனால் உற்பத்தி தாமதமாகிறது.

எனவே,தமிழக அரசே அந்நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து ஏற்று கோவேக்சின் தடுப்பூசியை, மத்திய அரசின் அனுமதியுடன் உற்பத்தி செய்ய முன் வர வேண்டும். இதன் மூலம் அந்த பொதுத்துறை நிறுவனத்தை காப்பதுடன், மக்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் மற்றும் இதர தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்திட முடியும். இதன் மூலம் தமிழக மக்களின் தேவையை நிறைவேற்றுவதோடு, வணிக அடிப்படையில் விற்கவும் முடியும்.

மருத்துவ உபகரண உற்பத்திக்காக, செங்கல்பட்டில் எச்எல்எல் மெடி பார்க்( HLL MEDI PARK) என்ற நிறுவனத்தில் தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய அரசுடன் ஒப்பந்தமிட்டு இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான கரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி இறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கோரமான காட்சிகள் நமது மனங்களை கடும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ஒவ்வொரு கரோனா நோயாளிக்கும் சிகிச்சைக்காகத் தேவைப்படும் ஆக்சிஜன், கரோனா அல்லாத மற்ற நோயாளிகளைவிட அதிக அளவில் பல நாட்களுக்குத் தேவைப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மிக அதிக வேகத்தில் அதிகரித்துவருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவையும் மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை வரலாம். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கிட, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் மூலம் உற்பத்தியை பெருக்கிட வேண்டும். தொழில்துறைக்கு ஆக்சிஜன் பயன் படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்திட வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஒவ்வொரு நாளும் 1050 மெட்டிரிக் டன் அளவிற்கு மருத்துவ ஆக்சிஜனை உற்பத்திச் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இது ஒட்டு மொத்த தமிழகத்தின் உற்பத்தித் திறனான 400 மெட்ரிக் டன்னைவிட இரண்டரை மடங்கு அதிகமாகும். உச்ச நீதிமன்றமும் அந்த ஆலையை தமிழக அரசே ஏற்று ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஏன் முன்வரக்கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வேண்டுகோளின் அடிப்படையில், மூடப்பட்டுள்ள அந்த ஆலையில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு முடிகின்ற வரை, கரோனா நோயாளிகளுக்காக மருத்துவ ஆக்சிஜினை மட்டும் உற்பத்தி செய்யலாம். மக்களின் உயிரை காத்திட மருத்துவ ஆக்சிஜன் மிக மிக முக்கியமான தேவையாக மாறியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொள்ளை நோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் போன்றவற்றின் அடிப்படையில் அந்நிறுவனத்தை உடனடியாக தமிழக அரசே கையகப்படுத்தி, தமிழக அரசே நேரடியாக, அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்படும் நடுநிலையான நிபுணர்கள் குழு, மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படும் நிபுணர்கள் குழு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டக்குழு பிரதிநிதிகளின் கூட்டு மேற்பார்வையில், முழுமையான பாதுகாப்புடன் மருத்துவ ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்யலாம்.

இதன் மூலம் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை உடனடியாக நிறைவு செய்திட முடியும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கிட முடியும். ஆயிரக்கணக்கான கரோனா நோயாளிகளின் உயிர்களை காத்திட முடியும். கரோனா நோயாளிகளின் நலன் கருதி, மனித நேய அடிப்படையில் இதை உடனடியாகச் செய்யலாம்.

தற்பொழுது, கரோனா மிக வேகமாகப் பரவுவதால், அதைத் தடுப்பதற்கு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம். இது காபந்து அரசு என்பதால், அனைத்துக் கட்சிகளையும் கலந்து பேசி ஜனநாயக ரீதியான முடிவுகளை அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே, இது போன்ற அவசர அவசிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்திடவும், மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி பேசி முடிவெடுத்திடவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்டிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x