

கோவை மண்டலத்தில் வனக் குற்றங்களைக் கண்டறிய முதல்முறையாக சிப்பிப்பாறை வகை நாய்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, வேட்டைத் தடுப்புக் காவலர்களின் கட்டளைகளுக்கு கட்டுப்பட நாய்களுக்கு தேனியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விலை உயர்ந்த மரங்கள் வெட்டிக் கடத்தல், வன விலங்குகள் வேட்டை, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் வழக்குகளில் வனத் துறையினருக்கு உதவும் வகையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகங்களில் ‘ஜெர்மன் ஷெப்பர்ட்’ வகை நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
‘ஜெர்மென் ஷெப்பர்ட்’, ‘டாபர்மேன்’ வகை நாய்களை பராமரிக்க அதிக செலவாகும். மேலும், குற்றங்கள் நிகழ்ந்தால் நாய்களை தொலைதூரம் அழைத்துச் செல்ல வேண்டி யுள்ளது.
இதைத் தவிர்க்க கோவை வன மண்டலத்தில் நாட்டு நாய்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை, கூடலூர், உதகை வனக் கோட்டங்கள், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு தலா ஒரு ‘சிப்பிப்பாறை’ நாய் குட்டி வீதம் 4 குட்டிகள் வாங்கப்பட்டன.
அவற்றுக்கு தேனி மாவட்டம் வைகை அணைப் பகுதியில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்றுவரும் பயிற்சிகள் குறித்து கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கல்லூரியின் துணை வனப் பாதுகாவலர் ராஜ்மோகன் ஆகியோர் கூறியதாவது:
தேனியில் உள்ள வன உயரடுக்கு படை மூலம் கடந்த 2 ஆண்டுகளாக மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற நாய்கள் மூலம் மரக் கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். சிப்பிப்பாறை வகை நாய்கள் அதிக மோப்பசக்தி, நன்றாக ஓடும் திறன் கொண்டவை. அவற்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் காட்டுக்குள் செல்ல முடியும். அனைத்து காலநிலைகளையும் இந்த நாய்கள் எதிர்கொள்ளும். அதிக உடல்நல பாதிப்புகள், பராமரிப்பு செலவுகள் இருக்காது.
என்னென்ன பயிற்சிகள்?
ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் மற்றும் காவல்துறையுடன் இணைந்து வலவன், கடுவன், அதவை, காளிகம் என பெயரிடப்பட்டுள்ள 4 சிப்பிப்பாறை நாய்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிறிய பொருட்களை மோப்பம் பிடித்து கண்டறிதல், தொலைதூரத்தில் உள்ள பொருட்களை கண்டறிதல், ஆட்களை கண்டறியும் பயிற்சி, குழிபறித்து கண்டுபிடித்தல், நீர்நிலையை கடந்து செல்லுதல், பொருட்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கி றோம்.
வன விலங்குகளின் தோல், கஞ்சா போன்றவற்றை கண்டறியும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை வனக் கோட்ட உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார் மேற்பார்வையில், மண்டலத்துக்கு தலா 2 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் கட்டளைகளுக்கு கட்டுப்பட நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் மே மாதம் இறுதியில் இந்த பயிற்சிகள் அனைத்தும் நிறைவடையும். அதன்பிறகு, அந்தந்த வனக் கோட்டங்களுக்கு நாய்கள் அனுப்பிவைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.