Published : 18 Dec 2015 09:05 AM
Last Updated : 18 Dec 2015 09:05 AM

பிரேக் பிடிக்காத பஸ் மோதி பெண் பலி: மூலக்கடையில் மக்கள் சாலை மறியல்

மூலக்கடையில் பிரேக் பிடிக்காத மாநகர பஸ் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை மூலக்கடை புதிய மேம்பாலம் அருகே வசிப்பவர் சுப்பிரமணி. இவரது மனைவி மஞ்சுளா (40). நேற்று காலையில் டீ வாங்குவதற்காக சாலையில் நடந்து சென்றார். அப்போது கிண்டி தொழிற்பேட்டையில் இருந்து மணலி நோக்கி சென்று கொண்டிருந்த 170சி பஸ், சாலையில் திடீரென தாறுமாறாக ஓடி மஞ்சுளா மீது பஸ் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மஞ்சுளாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னரும் வேகம் அடங்காத பஸ் ஒரு மோட்டார் சைக்கிளில் மோத, அதில் வந்த லிங்கேஸ்வரன் என்பவர் காயம் அடைந்தார். அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்தில் மஞ்சுளா இறந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக் கணக்கானவர்கள் கூடி, மூலக் கடை சந்திப்பில் மஞ்சுளா உட லுடன் மறியல் செய்தனர். விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸை யும் சிறைபிடித்தனர். மூலக் கடை சந்திப்பில் அடிக்கடி போக்கு வரத்து நெரிசலும், விபத்துகளும் நடக்கின்றன.

ஆனால் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். கொடுங்கையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி, மறியலை கைவிட வைத்தனர்.

மாதவரம் போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பரிசோதனைக்காக மஞ்சுளாவின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய மாநகர பஸ் ஓட்டுநர் சேகரை கைது செய்தனர். பஸ்ஸில் பிரேக் பிடிக்காததுதான் விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்தில் இறந்த மஞ்சுளா பூக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

பொறியாளர் பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் மகேந்திரன் (25). தரமணியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்தார். நேற்று காலை 5 மணியளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அடையாறு மேம்பாலம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் பலியானார். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x