

தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், போதிய அளவில் ஆக்சிஜன், மருத்து மாத்திரைகள் இருப்பில் உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை என, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலைசுவாமி தரிசனம் செய்த பின்னர்,கோயில் வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சரியான திட்டமிடுதல் மூலமாக மத்திய அரசு வழங்கக்கூடிய தடுப்பூசிகளை பற்றாக்குறையின்றி, போதிய அளவில் இருப்பு வைத்து மக்களுக்கு செலுத்தி இருக்கிறோம். தடுப்பூசி புழக்கத்துக்கு வந்து, 6 மாதங்களானாலும் கூட, தற்போதுதான் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
மேலும், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் போதியளவில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலான தடுப்பூசிகளை இருப்பு வைத்துள்ளோம். யாருக்கும் இல்லை என்ற நிலை இல்லை.
கரோனா வைரஸ் தொற்று இரண்டாம் கட்ட அலை வேகமாகபரவி வருவதாக மருத்து நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், அதன் தீவிர நிலை என்பது மூச்சு திணறல்தான். எனவே கூடுதலாக வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் ஆகியவை மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. அதனை உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் எதுவும் தட்டுப்பாடு இல்லை. போதிய அளவில் இருப்பு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மக்களின் ஒத்துழைப்பு தான் முக்கியம்.
மக்களின் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். மக்களின் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய பணி. இதனால் மக்கள் ஒத்துழைப்பு அளித்தாலே கரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே கடுமையான ஊரடங்குக்கு வாய்ப்பில்லை, என்றார் அவர்.