Last Updated : 25 Apr, 2021 06:10 AM

 

Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராத தொகை வசூலிக்கும் காவல் துறையினர் இலவச முகக்கவசங்களை வழங்க பொதுமக்கள் கோரிக்கை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதத் தொகையை வசூலிப்பதை தொழிலாக கொண்டுள்ள காவல் துறையினர் அதற்கான தீர்வை காண முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமெடுத்துள்ளது. உலகஅளவில் கரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்தை கடந்து கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

இம்மாதம் இறுதி வரை இரவு நேர ஊரடங்கு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தாலும் பொதுமக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வும், கரோனா 2-வது அலையின் வீரியம் மக்களுக்கு சரிவர புரியாததால் பல இடங்களில் அரசின் விதிமுறைகள் காற்றில் பறக்கின்றன.

அரசின் விதிமுறைகளை பின் பற்றாதவர்களை கண்டறிந்து அவர்களிடம் அபராதத் தொகையை வசூலிப்பதில் சுகாதாரத்துறையி னர், உள்ளாட்சி துறையினரை காட்டிலும் காவல் துறையினர் முதலிடத்தில் உள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவெளியை பின்பற்றாதவர்கள், வாகனங்களில் விதிமீறி செல்வோர் என பலரை மடக்கிப் பிடிக்கும் காவல் துறையினர் அவர்களிடம் அபராதத் தொகையை வசூலிக்கின்றனர்.

10 ரூபாய் மதிப்பிலான முகக் கவசத்தை அணியாவிட்டால் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதத் தொகையை வசூலிக்கும் காவல் துறையினர் அதற்கான தீர்வாக இலவச முகக்கவசங்களை வழங்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘வேலூர், திருப் பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் முக்கிய சாலை சந்திப்புகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், புறவழிச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், காய்கறி சந்தை, மார்க்கெட் பகுதி, வாரச்சந்தை, வழிபாட்டுத் தலங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகன சோதனை என்ற பெயரில் சட்டம் - ஒழுங்கு காவல் துறையினரும், போக்குவரத்து காவல் துறையினரும் ஆங்காங்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றன வருகின்றனர்.

ஒவ்வொரு சந்திப்பிலும் வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள், அவ் வழியாக முகக்கவசம் அணி யாமல் வருவோர்களை மடக்கி ரூ.200 அபராதம் விதிக்கின்றனர். கார்களில் வருவோர்களிடம் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கின்றனர். அபராதத் தொகையை வசூலிக்கும் காவல் துறையினர் ரூ.10 மதிப்பிலான முகக்கவசங்களை இலவசமாக வழங்கினால், அதை வாகன ஓட்டிகள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

வீட்டில் இருந்து வெளியே வரும் அவசரத்தில் ஒரு சிலர் முகக் கவசங்களை எடுத்து வர மறுந்து விடுகின்றனர்.

சிலர் மூச்சுத் திணறல் காரணமாக முகக்கவசத்தை மூக்குக்கு கீழே அணிந்து கொள்கின்றனர். அவர்களை அடையாளம் காணும் காவல் துறையினர் முகக்கவசம் சரியாக அணியவில்லை எனக்கூறி அபராதத் தொகையை வசூலிக்கின்றனர்.

ஒரு சில இடங்களில் முகக் கவசம் குறித்து கேள்வி எழுப்பும் பொது மக்களிடம், காவல் துறையினர் அறுவறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தியும், ஒருமையில் பேசியும் மனதை புண்படுத்துகின்றனர்.

பொதுமக்களின் நன்மைக்காக முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என அரசு தெரிவித்து வருவது எல்லோருக்கும் தெரியும்.சில நேரங்களில் ஞாபக மறதி காரணமாக நடைபெறும் தவறுகளுக்கு காவல் துறையினர் கடுமையாக நடந்துக்கொள்ளும் முறை வேதனை அளிக்கிறது.

அதேநேரத்தில், அபராதம் விதிக்கும் காவல் துறையினர் இலவச முகக்கவசங்களை வழங்க முன்வர வேண்டும். இதை காவல் துறை உயர் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இதேபோல், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகளும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாரிடம் கேட்டபோது, ‘‘கரோனா பரவல் தற்போது தொடங்கியது அல்ல. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரோனா பாதிப்பு தமிழகத்தில் உள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது நம்மில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

பொதுமக்களுக்கு இது தொடர்பாக பல்வேறு வழிகளில் விழிப்புணர்வுகளை காவல் துறை சார்பில் ஏற்படுத்தி வருகிறோம். இதையும் மீறி சிலர் தவறு செய்வதால் அடுத்த முறையும் அந்த தவறு மீண்டும் நடக்கக்கூடாது என்பதால் அபராதம் விதிக்கப்படுகிறது. இருந் தாலும், பொதுமக்களின் நியாயமான கோரிக்கையான இலவச முகக்கவசம் வழங்க உரிய நடவடிக்கை உடனடி யாக எடுக்கப்படும்.

அதேபோல, பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடக்கவும், கடமை தவறி யாரும் செயல்படக் கூடாது என காவல் துறையின ருக்கு அவ்வப்போது தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் தவறு நடந்தால் அதை எனது கவனத்துக்கு கொண்டு வந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x