Published : 25 Apr 2021 05:21 AM
Last Updated : 25 Apr 2021 05:21 AM

நிர்வாக குளறுபடிகளை சரிசெய்யாவிட்டால் அரசு மருத்துவர்களின் பணித்திறன் பாதிக்கும்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கருத்து

கோவை

நிர்வாக குளறுபடிகள், பிரச்சினைகளை சரிசெய்யாவிட்டால் பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவர்களின் பணித்திறன் பாதிக்கும் என தமிழ்நாடு அரசுமருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில், செயலாளர் என்.ரவிசங்கர் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றால் அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அரசு, தனியார் அலுவலகங்களில் மூன்றில் ஒரு பகுதி பணியாளர்களை கொண்டும், முடிந்தவரை வீட்டில் இருந்தபடியே பணி செய்யவும் அறிவுறுத்தி அலுவலகங்களில் கரோனா பரவலை தடுக்க வேண்டும். கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக ‘என்-95’ முகக்கவசம், முழு கவச உடை, கையுறை, கிருமிநாசினி உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்க வேண்டும். அனைத்து பாதுகாப்பு உபகரணங்களின் தரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.

தொற்று அதிகரித்துவரும் நிலையில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களை தமிழக அரசு உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊக்கத் தொகை

கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்களுக்கும் தமிழக முதல்வர் ஏற்கெனவே உறுதி அளித்தபடி ஒரு மாத சம்பளத்தை ஊக்கத்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் வழக்கமாக நடக்கும் கலந்தாய்வை நடப்பாண்டு தேர்தலை காரணம் காட்டி பாதியிலேயே அரசு நிறுத்திவிட்டது. கலந்தாய்வு நடந்து முடிந்த துறைகளின் ஆணைகளும் இன்றுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை. இதனால், மருத்துவர்கள் தங்கள் வழக்கமான மாத சம்பளத்தில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை இழந்து தவித்து வருகின்றனர்.

புதிதாக தொடங்கப்பட்ட பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதுநாள் வரை மார்ச் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. தன்னலமற்ற சேவையாற்றிவரும் அரசு மருத்துவர்கள், பல நிர்வாக குளறுபடிகள், பிரச்சினைகளால் சொல்ல முடியாத அளவுக்கு
துயரம் அடைந்து வருகின்றனர்.

இதை உரிய காலத்தில் சரிசெய்யாவிட்டால் மருத்துவர்களின் பணித்திறன் பாதிக்கும். எனவே, 18 ஆயிரம் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில், செயலாளர் என்.ரவிசங்கர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x