Published : 25 Apr 2021 05:19 am

Updated : 25 Apr 2021 05:19 am

 

Published : 25 Apr 2021 05:19 AM
Last Updated : 25 Apr 2021 05:19 AM

சென்னை அருகே மறைமலை நகரில் வெடிகுண்டு வீசி அதிமுக பிரமுகர் கொலை: பாதுகாவலர் சுட்டதில் கொலையாளி ஒருவர் உயிரிழப்பு; இருவர் தப்பினர் 

admk-cadre-murder

மறைமலைநகர்

மறைமலைநகரில் பிரபல தொழிலதிபரும் அதிமுக பிரமுகருமான திருமாறன் என்பவர் தொழில் போட்டியால் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு பாதுகாப்பாக இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதில் கொலையாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அருகே மறைமலை நகரைச் சேர்ந்தவர் திருமாறன்(50). அதிமுக பிரமுகரான இவர், மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வேலை ஆட்களை சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.


தொழில் போட்டி காரணமாக இவருக்கு ஏற்கெனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. கொலை முயற்சியும் நடைபெற்று உள்ளது. இதனால், 2016 முதல் இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் திருமண நாளான நேற்று, திருமாறன் அவரது மனைவி ஸ்ரீமதி(45) மற்றும் மகன் லலித், மகள், பாதுகாவலர் எழிலரசன் ஆகியோர் மாலை 6.30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள ஸ்ரீசெல்வமுத்து குமாரசாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அன்னதானம் வழங்கினர்.

அப்போது, அன்னதானத்தில் பங்கேற்க வந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென திருமாறன் மீது வெடிகுண்டு வீசியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது பாதுகாவலர் எழிலரசன், அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தசுரேஷ் (19) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மறைமலைநகர் போலீஸார் உடல்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில், திருமாறனின் மனைவி, குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

கோயிலில் இருந்த பக்தர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சரக போலீஸ் டிஐஜி சாமுண்டீஸ்வரி, செங்கல்பட்டு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில்பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர். தொழில்போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.


மறைமலை நகர்அதிமுக பிரமுகர் கொலைவெடிகுண்டுகொலையாளி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x