

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைத் திறந்து, பயணிகளை மீண்டும் அனுமதிக்க வலியுறுத்தி சுற்றுலா சார்ந்த நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் உட்பட சுற்றுலாத் தலங்களுக்கு, சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதேபோல் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுப் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சுற்றுலாவுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாப் பயணிகளை நம்பிக் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் முதல் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி அண்மையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுலாப் பயணிகளை நம்பி இருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்டுத் தர சில தளர்வுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று உதகை மத்தியப் பேருந்து நிலையம் முன்பு நீலகிரி மாவட்ட சுற்றுலா நலன் சார்ந்த கூட்டமைப்பின் கீழ் 65 சங்கங்களைச் சேர்ந்த வணிகர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜீஸ் தலைமை வகித்தார்.