ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதைக் கைவிட வேண்டும் என, இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று (ஏப். 24) வெளியிட்ட அறிக்கை:

"பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, மக்கள் எழுச்சி மிகுந்த போராட்டங்களை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர், தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது.

இச்சூழலில், நாட்டில் தற்போது நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து, அரசுக்கு இலவசமாக வழங்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்தது. ஆலைக்கு அனுமதி வழங்கலாம் என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஆலை மீது நம்பிக்கை இல்லை என்பதனையும், மக்களிடம் அச்சமும், பதற்றமும் நிலவுவதையும் நிறுவனமும் மத்திய அரசும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மத்திய, மாநில அரசுகளின் மிக தவறான, பொருளாதாரக் கொள்கையினால் பல ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தைப் பயன்படுத்தி, உரிய தொழிற்சாலைகளை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப் பயன்படுத்துவதை விடுத்து, மாறாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கோர முயல்வது, மக்கள் மீதான அலட்சியம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான முயற்சியைக் கைவிட்டு, மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது".

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in