ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; பிற்போக்குத்தனமாக நடக்கும் அரசியல்வாதிகள்: அண்ணாமலை விமர்சனம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; பிற்போக்குத்தனமாக நடக்கும் அரசியல்வாதிகள்: அண்ணாமலை விமர்சனம்
Updated on
1 min read

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் பிற்போக்குத்தனமாக நடந்து கொள்வதாகவும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நேற்று இரவு வருகை தந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது குணமாகி உள்ளேன். மீண்டும் மக்கள் பணியில் ஈடுபடுவதற்கு முன்பாக, பழனி முருகனைத் தரிசிக்க வந்தேன். நமது நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வசதிகள் இருந்தும்‌ இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆக்சிஜன் பெறுவது குறித்து இந்தியத் தூதரக அதிகாரிகள் பேசி வருகின்றனர். இதற்குக் காரணம் நமது எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் செயலே.

ஸ்டெர்லைட் ஆலையில் இயல்பாகவே ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி இருந்தும் உற்பத்தி செய்யவிடாமல் அரசியல் செய்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் மிகவும் பிற்போக்குத்தனமாக நடந்து கொள்கின்றனர். தேசிய அவசரம் கருதி ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதேபோல கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தவறான கருத்தைப் பரப்பி, பொதுமக்களிடம் தேவையற்ற பீதியை உருவாக்கியதே தடுப்பூசி வீணாகக் காரணம்.

அதிமுக அரசு சட்டம்- ஒழுங்கைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவிப்பது தவறானது. எதிர்க்கட்சிகள் தங்களின் தோல்வியை மறைக்கவே வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்வதாகக் கூறுகின்றன.

பலமுறை முறைகேடுகளை நிரூபிக்க தேர்தல் ஆணையம் சவால்விட்டும் அப்போது எல்லாம் ஒதுங்கிய‌ அரசியல் கட்சிகள் தற்போது குற்றம் சாட்டுவது என்பது மலிவு அரசியல். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்''.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in