முதல் தவணை தடுப்பூசி நிறுத்தம் இல்லை; 2-ம் தவணைக்கு முன்னுரிமை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

முதல் தவணை தடுப்பூசி நிறுத்தம் இல்லை; 2-ம் தவணைக்கு முன்னுரிமை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்
Updated on
1 min read

இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக வருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து போடப்படும். அதேநேரம் முதல் தவணை தடுப்பூசி போடுவதை நிறுத்தவில்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன. 16-ம் தேதி தொடங்கியது. முதல் தவணை தடுப்பூசி போட்ட 28 நாட்கள் இடைவெளியில், 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதால், 45 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவேக்சின் தடுப்பூசி பலமையங்களில் இருப்பு இல்லாததால், இதை முதல் தவணையாகப் போட்டவர்கள் இரண்டாம் தவணைக்காக ஒவ்வொரு மையமாக அலைந்து வருகின்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்தசுகாதாரத் துறை அதிகாரிகள்,2-ம் தவணை தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கும்படி வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். இந்தஉத்தரவைப் தவறாகப் புரிந்துகொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், பல மையங்களில் 2-ம் தவணைக்கு வருபவர்களுக்கு மட்டும் தடுப்பூசியை போடுகின்றனர். முதல் தவணை தடுப்பூசிபோட்டுக் கொள்ள வருபவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால், தடுப்பூசி மையங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, “முதல் தவணை தடுப்பூசி போடுவதை நிறுத்தவில்லை. 2-ம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால், 2-ம் தவணை தடுப்பூசிக்கு வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் முதல் தவணை தடுப்பூசி தொடர்ந்து போடப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in