

கரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிகதலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா தொற்று சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருவது வேதனை அளிக்கிறது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்தக் கூடிய தடுப்பூசிகளுக்கு அதன் தயாரிப்பு நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறையை போக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
கரோனா தொற்று அதிதீவீரமாக பரவி வருவதை கருத்தில்கொண்டு மக்களும் மத்திய, மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.