

முதல்வர் பழனிசாமியை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்து, பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம் குறித்து விளக்கினார்.
கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காலை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி, சில அறிவுறுத்தல்களை வழங்கினார். இதில் தமிழகம் சார்பில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் நேற்று மாலை சந்தித்தார். அப்போது, டிஜிபி ஜே.கே.திரிபாதி, அரசு ஆலோசகர் கே.சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆக்சிஜன் தயாரிப்பு, விநியோகம், மக்களுக்கான தானிய விநியோகம் குறித்து பிரதமர் வழங்கிய அறிவுறுத்தல்களை செயல்படுத்துவது குறித்தும், அடுத்தகட்டமாக தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிப்பது, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது ஆகியவை குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.