Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

சீவலப்பேரி கோயில் பூசாரி கொலைக்கு நிவாரணம் கோரி 5-வது நாளாக போராட்டம்: கழுத்தை அறுத்து தற்கொலை செய்வதாக மிரட்டியதால் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட கோயில் பூசாரி குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு, பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்யப் போவதாக ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் சுடலைமாட சுவாமி கோயில் பூசாரி சிதம்பரம்என்ற துரை(44), கடந்த 18-ம்தேதி கொலை செய்யப்பட்டார். கோயிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதமே கொலைக்கு காரணம் என சீவலப்பேரி போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. சீவலப்பேரியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் நாங்குநேரி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

இந்நிலையில், பூசாரி உடலைவாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்களும், சமூகத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பூசாரியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கோயில் வளாகத்தில் உள்ள மற்ற சமுதாயத்தினரின் கடைகளை அகற்ற வேண்டும். கோயில் பகுதி நிலத்தை அளவிட்டு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று 5-வது நாளாகபாளையங்கோட்டையில் உள்ளஅழகுமுத்துக்கோன் சிலை அருகே ஏராளமானோர் திரண்டு,ஆட்சியர் அலுவலகம் நோக்கிஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஆனால், போலீஸார் அனுமதி அளிக்காததையடுத்து அழகுமுத்துக்கோன் சிலையருகே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கனிராஜ் என்பவர் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை திடீரென்று உடலில் ஊற்றிக்கொண்டு, அழகுமுத்துக்கோன் சிலை பீடத்தில் ஏறினார். பின்னர்,கத்தியை எடுத்துக் காட்டிய அவர், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைசெய்வதாக மிரட்டல் விடுத்தார். போலீஸார்அவரை சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சமுதாய நிர்வாகிகள், ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயில் அருகே தற்காலிகமாக புறக்காவல் நிலையம் அமைப்பது, வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பின்பு கோயில் இடத்தை அளவிட்டு அளிப்பது என, அதிகாரிகள் உறுதிஅளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் உள்ள பூசாரியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x