

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த 2015-ம் ஆண்டு வேளச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை கோரியும் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் உரிமை அரசியல் கட்சியினருக்கு உள்ளது எனக்கூறி அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.