

திருமழிசையில் பிரியாணி தராததால் உணவு விடுதி, வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்குத் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் அருகே உள்ள திருமழிசை, திருவள்ளூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் அருணாசலபாண்டி(40). இவர் தன் வீட்டருகே 2 சைவம் மற்றும் அசைவ உணவு விடுதிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி மதியம், அசைவ உணவு விடுதியில் அருணாசலபாண்டி இருந்தபோது, 6 பேர் பிரியாணி கேட்டுள்ளனர். அப்போது பிரியாணி தீர்ந்ததால், அவர் தீர்ந்துவிட்டதாகக் கூறியுள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்றனர்.
சிறிது நேரத்தில் 4 மோட்டார் சைக்கிள்களில், கத்தி மற்றும் இரும்பு ராடுடன் வந்த 8 பேர், உணவு விடுதி மற்றும் வீடு ஆகியவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தப்பியோடினர்.
இச்சம்பவத்தில், உணவு விடுதியின்முகப்பு கண்ணாடி மட்டும் சேதமடைந்தது. அதிர்ஷடவசமாக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த வெள்ளவேடு போலீஸார், பெட்ரோல் குண்டு வீசியவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, திருமழிசை துணைகோள் நகரம் மற்றும் குன்றத்தூர் அருகே சிக்கராயபுரம் கல்குவாரி பகுதிகளில் பதுங்கியிருந்த, திருமழிசை, உடையார்கோயிலை சேர்ந்த சதீஷ்(20), வேலன்(20), திருப்பதி(21),கிறிஸ்டோபர்(20), திருமழிசை, கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த பழனி(20), நசரத்பேட்டையை சேர்ந்த பரத்ராஜ்(21) ஆகிய 6 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்குத் தொடர்பாக, தலைமறைவாக உள்ள எபினேசர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.