

சென்னையில் மே மாதத்தில் கரோனா பரவல் உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தேசிய திறன் பயிற்சி மையத்தில் செயல்பட்டு வரும், கரோனா தொற்று பாதித்த நபர்களுக்கான முதல்கட்ட உடல் பரிசோதனை மையத்தில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் கரோனா தொற்றுதொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும், சர்வதேச அளவிலும் தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது.
வல்லுநர்களின் கருத்துபடி, உலக அளவில் மே மாதத்தில்கரோனா பரவல் உச்சத்தில்இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வரும் நாட்களில் தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கை 5 ஆயிரம் வரை உயரவும் வாய்ப்புள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் தொற்று உயர்ந்து கொண்டுதான் செல்லும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதை எதிர்கொள்ளும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை நேரடியாக அரசுமருத்துவமனைகளுக்கு அனுப்பாமல், தற்போது 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்கட்ட பரிசோதனை மையங்களுக்கு அனுப்பிவைக்கிறோம். இதன் காரணமாகவே, மற்ற மாநிலங்களைப்போல சென்னையில் நோயாளிகள் மோசமான நிலையில் இருப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 85 சதவீதம் பேருக்கு குறிப்பிடும்படியான அறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை. எனவே, அறிகுறிகள் இல்லாதவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டாம். அறிகுறிகள் அதிகமாக இருப்பவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாகவோ, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் உதவியுடனோ மருத்துவமனைகளுக்கு செல்லலாம்.
சென்னையில் நேற்று 3 ஆயிரத்து700 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், 1,200 பேருக்கு மட்டுமே சிகிச்சை தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்தகட்டமாக, தடுப்பூசி போடுவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 10 ஆயிரத்து 658 கோவாக்சின், 75 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உள்ளன. கூடுதலாக தடுப்பூசிகள் வந்துகொண்டிருக்கின்றன.
சென்னை மாநகரம் மக்கள் அடத்தி கொண்டது. குறிப்பாக, ராயபுரம் போன்ற மண்டலங்களில் ஒரு சதுர கிலோமீட்டரில் 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதன் அடுத்த நடவடிக்கையாக, அன்றாடம் சேகரிக்கப்படும் கரோனா பரிசோதனை மாதிரிகளின் எண்ணிக்கையை 25 ஆயிரம் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இறுதிச் சடங்கு, மதம் சார்ந்த கூட்டங்கள், திருமணங்கள் ஆகியவற்றில் பங்கேற்பதாலேயே தொற்று அதிகமாகப் பரவுகிறது. இதுஒரு இக்கட்டான காலகட்டம். இந்த காலகட்டத்தில் மேற்கூறிய நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாநகராட்சி இணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாநகர நல அதிகாரி எம்.ஜெகதீசன் உடனிருந்தனர்.