

திண்டிவனம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்தன.
திண்டிவனம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் கடலூரைச் சேர்ந்த மாதவன் என்பவர் தின்னர் தயாரிக்கும் ரசாயன நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் 35-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பேரல்களில் தின்னர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பேரல்களில் இருந்த தின்னர் எரிய தொடங்கியது. மேலும் அங்கு வைத்திருந்த மூலப்பொருட்கள், மின்சாதன பொருட்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
செங்கல்பட்டு, தாம்பரம், திண்டிவனம், வானூர், விக்கிர வாண்டி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட நிலையிலும் தண்ணீர் இல்லாததால் திண்டிவனம், வானூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்களில் நிரப்பி தீயை அணைக்கும் பணி நடந்தது. நீண்ட நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
இவ்விபத்து குறித்து திண்டிவனம் வருவாய்துறையினர் மற்றும் மயிலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.