

சென்னையில் சுயேச்சையாக போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவர் உத்திரமேரூர் பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் இயற்கை விவசாயம் குறித்து பல்வேறு பெண்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.
சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது கணவர் நரசிம்மன் சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர். மகாலட்சுமி தற்போது நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.
இவர் உத்திரமேரூர் அருகே மலையான்குளம் பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரியநெல் ரகங்களை பயிர் செய்து வருவதுடன் பெண்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார். பூந்தண்டலம், மலையான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 9 ஏக்கரில் இவர்இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
மகாலட்சுமி இயற்கை இன்டர்நேஷனல் உழத்திகள் பவுண்டேஷன் எனும் நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் பெண்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியும், விளை பொருட்களை எவ்வாறு மதிப்புக் கூட்டி விற்பது என்பது தொடர்பான தகவல்களையும் அளித்து வருகிறார்.
இதுகுறித்து மகாலட்சுமி கூறும்போது:
நான் துணி வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தை செய்து வந்தேன். நம்மாழ்வாருடன் இருந்து இயற்கை விவசாயம் குறித்தும் பயிற்சி எடுத்துள்ளேன். ஆர்வம் காரணமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.
குறிப்பாக பெண்களை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்பது எனது விருப்பம். இதுவரை 400-க்கும் மேற்பட்ட பெண்களை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தியுள்ளேன். விவசாயத்தில் கிடைக்கும் பொருட்களை மதிப்புக் கூட்டி எவ்வாறு விற்பது என்பது தொடர்பாகவும் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். இயற்கை விவசாயத்தில் நான் செய்துவரும் சேவைக்காக எனக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
பலரும் விவசாயத்தை விட்டு விலகி வேறு வேலைக்குச் செல்லும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருவது அந்தப் பகுதி மக்களிடம் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.