

தேனி மாவட்டம், அரசரடியில் நேற்று முன்தினம் இரவு கிணற்றில் தாய், குட்டி யானை தவறி விழுந்தன. வனத்துறை மீட்புக் குழுவினர் தாய் யானையை மீட்ட தும் வனத்துக்குள் சென்றுவிட்டது. பின்னர் மீண்டும் வந்த தாய் யானையுடன் குட்டியை வனத் துறையினர் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் மேகமலைப் புலிகள் வனச் சரணாலயப் பகுதி அமைந்துள்ளது. இங்கு புலி, யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் வசிக் கின்றன. இதற்கு அருகில் அரசரடி எனும் மலையடி கிராமம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு இக்கிராமத்துக்கு அருகே வந்த யானைகள், அங்கிருந்த மூங்கில்களைச் சாப்பிட்டன. அதில் தாய் யானை மற்றும் 3 மாத பெண் குட்டி யானையும், அருகே இருந்த கிணற்றுக்கு தண்ணீர் குடிக்க வந்துள்ளன. அதில் குட்டி யானை கிணற்றில் தவறி விழுந்தது. மேலே ஏற முடியாமல் தவித்த குட்டியை காப்பாற்ற தாய் யானை முயன்றது. ஆனால், தாய் யானையும் கிணற்றில் தவறி விழுந்தது.
அதிகாலையில் கிணற்றுக்குள் யானையின் பிளிறலைக் கேட்ட கிராம மக்கள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவி த்தனர்.
வன உயிரின சரணாலயக் காப்பாளர் சோமன் தலைமையில் வருசநாடு, கண்டமனூர் வனச் சரகர்கள் ஆறுமுகம், சதீஷ் கண்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினர், கால்நடை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
பொக்லைன் மூலம் கிணற்றின் பக்கவாட்டுச் சுவர் உடைக்கப்பட்டது. தாய் யானை சிரமத்துடன் மேலே ஏறியது. பொதுமக்கள் அதிகம் திரண்டிருந்ததால், அச்சத்தில் வனத்துக்குள் ஓடிவிட்டது.
பின்னர் குட்டி யானையையும் குழுவினர் பத்திரமாக மீட்டனர். ஆனால், தாய் யானை இல்லாமல் குட்டியை வனத்துக்குள் தனி யாக அனுப்ப முடியாது என் பதால், அப்பகுதியிலேயே கட்டி வைத்திருந்தனர். சில மணி நேரம் கழித்து குட்டி யைத் தேடி தாய் யானை மீண்டும் அப்பகுதிக்கு வந்தது. இதையடுத்து குட்டி யானையை வனத்துறை அவிழ்த்துவிட்டதும், வேகமாக ஓடிச் சென்று தாயுடன் இணைந்தது. தாயும், குட்டியும் சந்தோஷமாக பிளிறியபடி வனத்துக்குள் சென்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:
இரவு முழுவதும் கிணற்றி லேயே கிடந்ததால் குட்டி யானை உடலில் சிறு காயங்கள் இருந்தன. வனத்தில் புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், குட்டி யானையை தனியாக அனுப்ப முடியாது.
எனவே வனத்துறை பாது காப்பில் வைத்திருந்தோம். பின்னர் குட்டியைத் தேடி பரித விப்புடன் வந்த தாய் யானையுடன் அனுப்பி வைத்தோம் என்றனர்.