Last Updated : 23 Apr, 2021 01:02 PM

 

Published : 23 Apr 2021 01:02 PM
Last Updated : 23 Apr 2021 01:02 PM

விவேக்கின் மரம் நடும் திட்டத்தைப் போல தடுப்பூசி திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்: புதுவை ஆளுநர் தமிழிசை

நடிகர் விவேக்கின் மரணத்துக்குப் பிறகு தடுப்பூசி போடுவது வெகுவாகக் குறைந்துள்ளது. அவரது மரம் நடும் திட்டத்தை முன்னெடுப்பதைப் போல தடுப்பூசி திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனி கவனிப்பு மையத்தைப் பார்வையிட துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று சென்றார். அவருக்குக் காவலர் வரவேற்பு தரப்பட்டது. மையத்தை ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கரோனாவிலிருந்து மக்களைக் காக்கத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. தற்போது 10 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள், மருத்துவ பிராண வாயு வங்கி இருப்பு வைக்கவும், வென்டிலேட்டர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களைப் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடுப்புப் பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மருத்துவமனைகளிலும் பிராண வாயு படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டம் கூடுவதைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்புக்காகவும்தான் ஊரடங்கு போடப்பட்டது. மக்களின் வாழ்வாதாரமும் முக்கியம். மக்களின் வாழ்வு அதை விட முக்கியம். ஊரடங்கு தீர்வு இல்லை என்றாலும் மக்களுக்குப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊரடங்கு ஏற்படுத்தும்.

நடிகர் விவேக்கின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவரது மரணத்துக்குப் பிறகு தடுப்பூசி போடுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. இங்கு 15 ஆயிரமாக இருந்தது 1,500 ஆகக் குறைந்துள்ளது. கரோனா தடுப்பூசிக்கும் அவரது மரணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மக்கள் அச்சமில்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நடிகர் விவேக்கின் மரம் நடும் திட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்துள்ளதைப் போலவே, தடுப்பூசி திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் இதை ஓர் இயக்கமாக மாற்றி வெற்றி பெறச் செய்ய முடியும்".

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x