Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM

புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்கான அரசு அதிகாரிகள் குழுவில் மாற்றம்: தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்நடவடிக்கையின் ஒரு பகுதியாக,புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில்முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது அனைத்து மாநிலங்களிலும் வேலைக்காகச் சென்று தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் மாநிலங்களுக்கு சரக்கு வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் நடந்தும் செல்லும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, ரயில்கள் மூலம்அவர்களை சொந்த ஊர்களுக்குஅனுப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. மேலும், இங்குள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்குஅனுப்பவும், தங்கியுள்ளவர்களுக்கு தேவையான வசதிகளைசெய்யவும், வெளிமாநிலங்களில் தங்கியிருந்த தமிழக தொழிலாளர்கள், மாணவர்களை அழைத்து வரவும், அதிகாரிகள் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப்பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து,புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் மாநிலங்களிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பிரதமர்நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

அதன்படி, தமிழகத்தில் ஏற்கெனவே புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட 8 குழுக்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர கூடுதலாக 3குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. அத்துடன், 3 புதிய குழுக்களும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில்உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிமாநிலங்களில் தங்கியுள்ள தமிழகத் தொழிலாளர்கள், மாணவர்களுக்காக தொழிலாளர் துறை செயலர் நசிமுதீன், உயர்கல்வி செயலர் அபூர்வா, கூடுதல்டிஜிபி (இயக்கம்) ஏ.கே.விஸ்வநாதன், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு தேவைகள் கொண்டவர்களுக்கு உதவ, திட்டம் வளர்ச்சித் துறை செயலர் ஜெய ரகுநந்தன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் சி.விஜயராஜ்குமார், சமூக நலத்துறை செயலர் எஸ்.மதுமதி ஆகியோர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள், பத்திரிகைகளுடனான தொடர்புக்காக சிப்காட்மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன், செய்தித் துறை இயக்குநர் பாஸ்கரபாண்டியன், எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 8 குழுக்களில், மாநில அளவில் அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்தல், மத்திய அரசு மற்றும் இதர மாநிலங்களுடனான தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டறை நிர்வாகத்துக்கு, வருவாய்த் துறை செயலர் அதுல்யமிஸ்ரா, நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், பொதுத்துறை செயலர் பி.செந்தில்குமார், சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி திருநாவுக்கரசு, மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சல், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x