

லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் 5.5 கிலோ தங்கநகை திருடுபோன விவகாரத்தில் திருடனின் நண்பர் ராஜஸ்தானில் பிடிபட்டுள்ளார். முக்கிய குற்றவாளியைப் பிடிப்பதில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கடைக்கு நகைகள் செய்யும் நகைப் பட்டறை அபிபுல்லா சாலையில் உள்ளது. இங்குள்ள நகைகளை தணிக்கை செய்தபோது 5.5 கிலோ தங்க நகைகள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, நகைக் கடையின் கிளை மேலாளர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, நகைப் பட்டறையில் பணியாற்றி வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஊழியர் பிரவின்குமார் சிங் என்பவர் நகைகளைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான ராஜஸ்தான் ஊழியரைப் பிடிக்கஆய்வாளர் விஜயன் தலைமையிலான தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்றனர்.
அங்கு சம்பந்தப்பட்ட பிரவின்குமார் சிங்குடன் தொடர்பில் இருந்த அவரது நண்பரை பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே செல்போன் பயன்படுத்துவதை பிரவின்குமார் சிங் நிறுத்தியுள்ளார். மேலும், ஒவ்வொரு இடமாக தனது இருப்பிடத்தை மாற்றி வருவதால், அவரை கைது செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் விரைவில் அவரைக் கைது செய்து நகைகளை மீட்போம் என்று தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.