Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM

ஒரு வாரத்துக்கான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது: சில இடங்களில் தட்டுப்பாட்டால் அவதி

சென்னை

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கான கரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது. சில இடங்களில் தட்டுப்பாடு நிலவுவதால் ஊசி போட்டுக்கொள்ள வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் உட்பட சுமார் 5 ஆயிரம் மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. சராசரியாக தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த 15, 16-ம் தேதிகளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடுவது சற்று குறைந்துள்ளது. சில அரசு சுகாதார மையங்களில் கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பு மருந்துகளும் இல்லை எனவும், சில இடங்களில் கோவேக்ஸின் இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் 2-வதுதவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் 2 நாட்கள் கழித்து வருமாறு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதுபற்றி கேட்டபோது, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும்பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்தியஅரசு 61.85 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. இதுவரை 50 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்த முடியாமல் வீணானதுபோக, இன்னும் 7 நாட்களுக்கு தடுப்பூசி இருப்பு உள்ளது.

இதற்கிடையில், கூடுதலாக 20லட்சம் தடுப்பூசியை மத்திய அரசிடம் கடந்த வாரம் கேட்டோம். அதில் 7 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. மீதியுள்ள தடுப்பூசியையும் மத்திய அரசு விரைவில் அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x