

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகையில் ரூ.25 கோடி மோசடிசெய்ததாக பேராயர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை போத்தனூர் அருகேஉள்ள, வெள்ளலூர் கிறிஸ்தவ ஆலயத்தின் தலைவர் மற்றும் போதகராக (பொறுப்பு) உள்ளவர் கெர்சோம் ஜேக்கப் (62). இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் கடந்த 20-ம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
நான், 2001-ல் பந்தலூர் போதக சேகரத்தில் சபை ஊழியராக பணியில் அமர்த்தப்பட்டு, 2004 வரை அங்கு பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து. 2015 ஜூன் முதல் தற்போது வரை போத்தனூர் கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றி வருகிறேன்.
2005 டிச.18 முதல் தற்போது வரை என்னுடைய ஊதியத்தில் இருந்து, வருங்கால வைப்பு நிதி தொகையை மாதந்தோறும் கோவை திருமண்டலத்துக்கு அனுப்பியுள்ளேன். இந்நிலையில், கோவை திருமண்டலம் பொருளாளருக்கு என்னுடைய வருங்கால வைப்பு நிதியில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை அறிய, 2019 ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் கடிதம் அனுப்பி, அதற்கு பதில் கிடைக்கவில்லை. பின்னர், கோவைவருங்கால வைப்பு நிதி அலுவலக ஆணையரிடம் எனது 15 ஆண்டு கால வைப்புத்தொகை குறித்து 2019 பிப்ரவரியில் இருமுறை, ஏப்ரலில் ஒருமுறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. பின்னர், கோவையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து விசாரித்தேன்.
2019 ஆகஸ்ட் முதல்தான் கோவை திருமண்டலத்தின் சார்பில் வருங்கால வைப்பு நிதி கட்டி வரும் தகவல் எனக்கு கிடைத்தது. இதற்கிடையே, திருமண்டலத்தில் இருந்து புதிய பி.எப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்று கூறி யுஏஎன் எண்ணை தெரிவித்தனர். என் கணக்கில் ரூ.45 ஆயிரம் மட்டுமே உள்ளதை அறிந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு சேர வேண்டிய 15 ஆண்டுகால வருங்கால வைப்பு நிதியை மோசடி செய்தது தெரியவந்தது.
மேற்கண்ட திருமண்டலத்துக்கு உட்பட்ட 125 தேவாலயங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 67 ஆண்டுகளாக மாதந்தோறும் வருங்கால வைப்பு நிதி தொகையை பிடித்துக் கொண்டு, ஊதியம் தருகின்றனர். ஆனால், உண்மையில் கடந்த ஆகஸ்டில் இருந்துதான் அனைத்து தேவாலயங்களில் பணிபுரிபவர்களுக்கும் வருங்கால வைப்புநிதி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 67 ஆண்டுகளாக என்னைபோன்று, தேவாலயங்களில் பணிபுரிந்த பலருக்கு, சேர வேண்டிய வருங்கால வைப்புநிதி ரூ.25 கோடிக்கு மேல் அரசுக்கு செலுத்தாமல், செலுத்தியதுபோல் பொய்யாக ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக கோவை திருமண்டலத்தின் தற்போதைய பேராயர் திமோத்தை ரவீந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்புகாரின்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸார் கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி, மோசடி ஆகிய பிரிவுகளின்கீழ் பேராயர் திமோத்தை ரவீந்தர், முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்களதாஸ், பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.