

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, உலக பூமி தினமான நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் ஏறத்தாழ 16 கோடி ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மண் வள குறைபாட்டின் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
ஒருபுறம் நாம் மண்ணின் தரத்தை இழந்து கொண்டிருக்கிறோம். மறுபுறம், விவசாயிகள் தங்கள் அடுத்த தலைமுறையை விவசாயத்தில் ஈடுபடுத்தவில்லை. இதன் பொருள் இன்னும் 25 ஆண்டுகளில், நாம் ஒரு பெரிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள உள்ளோம் என்பதை காட்டுகிறது.
வெப்ப மண்டல தேசத்தில் நம்மிடம் உள்ள ஒரே நீர் ஆதாரம் பருவமழை மட்டுமே. 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை பருவ மழை பூமியில் பெய்கிறது. 60 நாட்களில் இறங்கும் இந்த நீரை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு உணவளிக்க 365 நாட்கள் மண்ணில் பாதுகாக்க வேண்டும். தாவரங்கள் மரங்கள் இல்லாமல் இதை நாம் செய்ய வழி இல்லை. வளமான மண் தான் நம் தேசத்தின் உண்மையான சொத்து. வளமான மண் இல்லாமல், தண்ணீர் என்ற கேள்விக்கு இடமே இல்லை.
மண்ணின் வலிமை பலவீனம் அடைந்தால் நம் உடலும் பலவீனமடையும். ஆகவே, மண் வளத்தை மேம்படுத்த வேளாண் காடு வளர்ப்பு அல்லது மரம் சார்ந்த விவசாயமுறை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதன் காரணமாக நாங்கள் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் மூலம் மரம் சார்ந்த விவசாயத்தைப் பரிந்துரைத்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.