பிளாஸ்டிக் கழிவில் இருந்து இன்ஜின் ஆயில் உற்பத்தி செய்யும் ‘பைரோலிஸ் பிளாண்ட்’ - ஊழியர்களின்றி முடக்கம்

பிளாஸ்டிக் கழிவில் இருந்து இன்ஜின் ஆயில் உற்பத்தி செய்யும் ‘பைரோலிஸ் பிளாண்ட்’ - ஊழியர்களின்றி முடக்கம்
Updated on
1 min read

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நாளொன்றுக்கு 12 டன்மக்கும் குப்பை, 8 டன் மக்காதகுப்பை சேகரமாகிறது.பொள்ளாச்சி சாலையிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்குக்கு அவை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கவும், அதன்மூலமாக இன்ஜின் ஆயில் எனப்படும் ‘பைரோலிஸ்' ஆயில் தயாரிக்கும் திட்டமும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதற்காக நகராட்சி சார்பில் ரூ.6 லட்சம் செலவில் ராட்சத கொதி கலன் மற்றும் குழாய்கள் ஏற்படுத்தப்பட்டன.

கொதிகலனில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலமாக திரவமாக மாறி, ஆவியாக்கல் தொழில்நுட்பத்தை பின்பற்றியதாக கூறப்பட்டது. பின் குளிர்விக்கப்படுவதால் வெளியேற்றப்படும் ஆயில், ஜெனரேட்டர்களுக்கு பயன்படும் எனவும் கூறப்பட்டது. தொடங்கிய சில நாட்கள் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்டது. இதனால், அரசு நிதி விரயமாக்கப்பட்டுள்ளதாகவும், சரியான திட்டமிடல் இல்லாததுதான் இத்திட்டத்தின் தோல்விக்கு காரணம்எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "பாலித்தீன், பிளாஸ்டிக், தெர்மாகோல், அட்டை, துணி உள்ளிட்ட 11 வகையான மக்காத பொருட்கள் அடையாளம் காணப்பட்டு, உரக்கிடங்கில் தனியாக சேகரிக்கப்படுகின்றன. இவற்றை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி அகற்றும் நோக்கில், தனியார் ஒருவரின் உதவியுடன் 'பைரோலிஸ்' திட்டம் தொடங்கப்பட்டது. கொதிகலனில் பிளாஸ்டிக் கொட்டப்பட்டு, அவற்றை எரிக்க விறகு பயன்படுத்தப்பட்டது. மர எரிபொருளுக்காக கூடுதல் செலவானது. மேலும், அதனை திறம்பட செயல்படுத்த தேவையான பணியாளர்கள் இல்லாததால், தொடங்கிய வேகத்திலேயே திட்டம் முடங்கியது. ‘பைரோலிஸ்' திட்டத்தை செயல்படுத்த கூடுதல் நிதி சுமை ஏற்படும் நிலை உள்ளது. அதனால், இப்போதைக்கு இத்திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in