

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சென்னை காவல்துறை சார்பில் தினமும் 200 இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. கரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்புப் பணியில் முன்கள வீரர்களாகச் செயல்படும் காவல் துறையினர் தொடர் விழிப்புணர்விலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை அமைந்தகரையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு முகாமில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்து கொண்டார். தொடர்ந்து கரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் இந்த பரவலைத் தடுக்க சென்னை காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அனைத்து காவல் பிரிவினரும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தினமும் 200 இடங்களில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம்.
கரோனா பரவலைத் தடுப்பது மிகவும் எளிது. முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தாலே கரோனா பரவலை முற்றிலும் தடுத்து விடலாம். அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பு விவகாரத்தில் பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்குகின்றனர். தகுதி உடையவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் கரோனா தடுப்பு உபகரணங்களை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.
சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் கே.எழிலரசன், பி.கே.செந்தில்குமாரி, துணை ஆணையர்கள் ஜவஹர், எம்.துரை, எம்.எம்.அசோக்குமார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.