Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மே 1-ம் தேதி பிரிப்பதை கைவிட வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கோரிக்கை

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதிக்கு முன்னதாக 1-ம் தேதி, தபால் வாக்குகளைப் பிரிக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது என்று அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே-2-ம் தேதி 76 மையங்களில் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் அதிமுக சார்பில், அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில்தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அதன்படி மே 2-ம் தேதிதான் எண்ணப்பட வேண்டும். அதற்கு முன்னதாக, முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்ட ஸ்டிராங் அறையை எந்த சூழலிலும் திறக்கக் கூடாது.

மே 2-ம் தேதிதான் திறக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் கையாளப்பட்ட வழிமுறைகளின்படிதான் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் அமைய வேண்டும்.

சில மாவட்டங்களில் முன்கூட்டியே மே 1-ம் தேதி அறைகளைத் திறந்து, தபால் வாக்குகளை கட்டுக்களாக பிரித்து வைக்க உள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர். அதை தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.

அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இதுகுறித்து அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் நிலையில், முதல் நாளில் தபால் வாக்குகளை பண்டல் செய்வது என்பது மக்கள் பிரதிநிதிச் சட்டத்துக்கு எதிரானதாகும்.

வாக்கு எண்ணிக்கை மேஜைகள்

கண்டெய்னர், வைஃபை விவகாரத்தை பொறுத்தவரை, தேர்தல் ஆணையம் எந்த ஒரு குறையும் சொல்லாத அளவுக்கு கடமையை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

குறைகளை நிவர்த்தி செய்வது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. 100 சதவீதம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குற்றச்சாட்டுக்கு இடம்பெறாத வகையில் இருக்க வேண்டும். மேலும், வாக்கு எண்ணிக்கைக்கான மேஜையை குறைக்காமல் பழையை நிலையை தொடர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x