

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 23 புறநோயாளி பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கு 1,343 உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி உள்ளது. புறநோயாளிகளாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
மருத்துவமனையில் 1,100-க்கும்மேற்பட்ட செவிலியர்கள் பணிசெய்ய வேண்டிய இடத்தில் 152 செவிலியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். சுமார் 900 செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. மக்கள் நலன் கருதி காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கரோனா சிகிச்சைக்கு 500 செவிலியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 35 செவிலியர்கள் மட்டுமே கரோனா சிகிச்சைக்காக பணியாற்றுகின்றனர். 465 செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. கரோனா காலத்தைகருத்தில்கொண்டு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர். 24-ம் தேதி வரை கருப்பு பட்டை அணிந்து பணியாற்றுவது என்றும், 26-ம் தேதி முதல் நோயாளிகள் பாதிக்காத வகையில் தினமும் அரசின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் நோயாளிகளுக்கு பாதிப்பு இன்றி ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தப்படும் எனவும் செவிலியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.