காலை 10 முதல் மாலை 6 வரை என டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்: தலைமை செயலருக்கு கோரிக்கை

காலை 10 முதல் மாலை 6 வரை என டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்: தலைமை செயலருக்கு கோரிக்கை
Updated on
1 min read

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை காலை 10 முதல் மாலை 6 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கு.பால்பாண்டியன், தலைமை செயலருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றின் 2-வது அலை கடந்த ஆண்டை விட வேகமாகப் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணிக்கு விற்பனை முடிந்தபின் கணக்குகளை முடிக்க 10 மணி ஆகிவிடுகிறது. டாஸ்மாக் பணியாளர்கள் வெகு தொலைவில் இருந்து பணிக்கு வருகின்றனர். இரவு நேர ஊரடங்கு காரணமாக இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து இல்லாததால் வீடுகளுக்குத் திரும்புவதில் சிரமம் ஏற்படுகிறது.

அதேபோல், இரவு நேரங்களில் விற்பனை பணத்துடன் இருசக்கர வாகனங்களில் பணியாளர்கள் வீடு திரும்பும்போது வழிப்பறி செய்யப்படும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. எனவே, விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in