

தமிழகத்தில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை கூறி, உரிய நிவாரணம் பெற தொழிலாளர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா 2-வது அலை பரவலை தொடர்ந்து, வெளி மாநில தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர் திரும்புவதற்காக பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டமாக கூடி வருகின்றனர்.
வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகத்தில் தங்கிப் பணியாற்ற உகந்த சூழலை உருவாக்கவும், இந்த இக்கட்டான நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்லாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலில், அவர்கள் தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்கவும், நிவாரணம் பெறவும் தொழிலாளர் துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை 044 - 24321438, 24321408 ஆகிய தொலைபேசி எண்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம். வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் அவர்களுக்கு கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் ஆலோசனை, வழிகாட்டுதல்கள் வழங்குவார்கள். அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கப்படும்.
எனவே, தமிழகத்தில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமோ, பதற்றமோ அடையாமல் தங்கள் பணியிடங்களிலேயே தொடர்ந்து பணியாற்றுமாறும், அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், வெளி மாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள 9 மாவட்டங்களில் தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட அளவிலும்கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள், செல்போன் எண் விவரம்:
சென்னை - கி.பழனி 7904802429, திருவள்ளூர் - தொழிலாளர் உதவி ஆணையர் ச.சுதா 9442832516, காஞ்சிபுரம் - எஸ்.நீலகண்டன் 9840090101, செங்கல்பட்டு - ஆ.சண்பகராமன் 9940856855, சேலம் - சி.முத்து 9489214157, கோவை - ஏ.வெங்கடேசன் 9941121001, திருப்பூர் - ஆர்.மலர்க்கொடி 9789723235, கிருஷ்ணகிரி - ஆர்.மாதேஸ்வரன் 9842908287, திருநெல்வேலி - கா.ஆனந்தன் 9965711725.
இதுதொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.