

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வடகிழக்குப் பருவமழை கடந்த 20 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்து வருகிறது. இதிலும் கடந்த 4 நாட்களாக மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது.
இதனால் திருவாரூர் மாவட்டத் தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் வீடுகளில் வசிப்போர் அவதிப் பட்டு வருகின்றனர். தண்ணீரை வடியவைக்கும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழை காரணமாக மாவட்டத்தில் சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை நேற்று இரவு வரை இடைவிடாது பெய்ததால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மழையால் திருவாரூர், மன்னார்குடி போன்ற நகரங்களில் சாலைகள் வெறிச் சோடிக் காணப்பட்டது.
மழையால் கோட்டூர் அருகே ஒரத்தூரில் சுவர் இடிந்து விழுந்து செல்வராஜ்(55) என்பவர் பலி யானார். முத்துப்பேட்டையில் குடியிருப்புகளை மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர், நாகையில்…
தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் மழை தொடர்ந்தால் நெற்பயிர்கள் முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில் அதிகபட்சமாக 64 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.