Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

கரோனா தொற்றாளர்களின் சுவாச பிரச்சினைக்கு குறைந்த விலையில் ஆக்சிஜன் உபகரணம்: திருச்சியைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது

திருச்சி

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாசப் பிரச்சினையைத் தீர்க்க திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் குறைந்த விலையில்ஆக்சிஜன்வழங்கும் உபகரணங்களை தயாரித்து வழங்கி வருகிறது.

கரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படும் கரோனா தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் முக்கிய தேவையாக உள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருச்சியில் உள்ள `கிராஸ் ஃபியூஷன்’ என்ற தொழில்நுட்ப தொடக்க நிலை நிறுவனம் கரோனா தொற்றாளர்களுக்கு குறைந்த அளவிலான ஆக்சிஜன் வழங்கும் உபகரணங்களை தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் தயாரித்துள்ள NIV-R20 என்ற உபகரணத்தை, மற்ற உபகரணங்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த ஆக்சிஜன், அதாவது நிமிடத்துக்கு 2 லிட்டர் (2LPM) மட்டும் இதில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த குறைந்த அளவு ஆக்சிஜனைக் கொண்டே கரோனா தொற்றாளர்களின் ஆக்சிஜன் அளவை (SPO2) 80 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக விரைவில் உயர்த்த முடியும் என்கிறார் இந்த நிறுவனத்தின் நிறுவனரான சாமி சுப்பையா.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: இந்த உபகரணத்தை நானும், டாக்டர் ரவி என்பவரும் இணைந்து உருவாக்கியுள்ளோம். கடந்த 9 மாதங்களில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு இந்த உபகரணத்தை வழங்கி, சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக பயன்படுத்தப்படும் ஐசியூ வென்டிலேட்டரின் விலையுடன் ஒப்பிடுகையில், எங்களது உபகரணத்தின் விலை (ஏறத்தாழ ரூ.1.50 லட்சம்) மிகவும் குறைவு என்பதால், மருத்துவமனைகள் அதிக தொகையை இதற்கென முதலீடு செய்ய வேண்டியதில்லை. நோயாளிகள் வெளிவிடும் மூச்சுக்காற்றை மறுசுழற்சி செய்யும் வசதியும் உள்ளதால் சிகிச்சை அறையில் நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்படுகிறது.

மேலும், தொலைதூரங்களில் உள்ள கிராமங்களிலும், மலைவாழ் பகுதிகளில் உள்ள மையங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமலேயே இந்த உபகரணத்துடன் 5 லிட்டர் (5LPM) ஆக்சிஜன் செறிவாக்கியை (Concentrator) இணைத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து இரு கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தெரபி கொடுக்க முடியும்.

இந்த உபகரணத்தை பயன்படுத்தினால், ஐசியூ-க்கு செல்லும் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும், சுவாசப் பிரச்சினையால் வென்டிலேட்டர் கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்பும் தடுக்கப்படும். மருத்துவமனைகளுக்கு உபகரணம் வாங்கும் செலவு மற்றும் ஆக்சிஜன் வாங்கும் செலவு ஆகியவை குறையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x