Last Updated : 22 Apr, 2021 07:43 PM

 

Published : 22 Apr 2021 07:43 PM
Last Updated : 22 Apr 2021 07:43 PM

திருப்பத்தூர் அருகே பல்லவர் காலத்தைச் சேர்ந்த 4 நடுகற்கள் கண்டெடுப்பு

ஜவ்வாது மலையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் காலத்து நடுகற்கள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கி.பி.7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால எழுத்துடைய 4 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி தலைமையில் காணி நிலம் முனிசாமி, தொல்லியல் அறிஞர் வெங்கடேசன், பேராசிரியர்கள் கோவிந்தராஜன், சங்கர் மற்றும் வேந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் உள்ள புங்கம்பட்டு நாட்டில் கள ஆய்வு நடத்தினர்.

அப்போது, சின்ன வட்டானூர் என்ற கிராமத்தில் 2 எழுத்துடைய நடுகற்கள், உடைந்த நிலையில் ஒரு நடுகல், மண்ணில் புதைந்த நிலையில் மற்றொரு நடுகல் என மொத்தம் 4 நடுகற்களைக் கண்டெடுத்தனர்.

இதுகுறித்துப் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி கூறியதாவது:

''திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலையில் சொல்லாட்சி கொண்ட சில நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கற்கள் அனைத்தும் கி.பி.7-ம் நூற்றாண்டு அதாவது 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த நடுகற்களாகும். ஜவ்வாது மலைக்கு உட்பட்ட புங்கம்பட்டு நாடு, சின்ன வட்டானூர் கிராமத்தில் வடகிழக்குத் திசையில் 2 கி.மீ. தொலைவில் இலவ மரத்து ஆற்று ஓடையின் மேல் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 2 எழுத்துடைய நடுகற்களைக் கண்டெடுத்தோம். அதன் அருகே, உடைந்த நிலையில் ஒரு கல், மண்ணில் புதைந்த நிலையில் படுத்த கோலத்தில் ஒரு கல் என மொத்தம் 4 வரலாற்றுச் சிறப்புடைய கற்களைக் கண்டெடுத்துள்ளோம்.

முதல் நடுகல்லானது 137 செ.மீ. நீளமும், 70 செ.மீ. அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் உள்ள உருவம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையும், கழுத்தில் ஆபரணமும், காதுகளில் குண்டலங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் வலது கையில் குறுவாள் ஒன்றும், இடது கையில் வில் ஒன்றும் உள்ளது. இடைக்கச்சும், அதில் குறுவாள் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உருவத்தின் இடது கால் ஓரத்தில் 2 மாடுகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கல்லில் சில வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இக்கல்லில் உள்ள எழுத்து வடிவம் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். பல்லவர் காலத்தில் ஜவ்வாது மலை பகுதி பங்கள நாட்டில் அமைந்திருந்தது என்பதை இக்கல்வெட்டு, சான்றுகளுடன் விளக்குகிறது.

அதேபோல, 2-வது நடுகல் 151 செ.மீ. நீளமும், 100 செ.மீ. அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் உள்ள வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் உள்ளன. வயிற்றுப் பகுதியில் அம்பு ஒன்று புதைந்தது போல் காணப்படுகிறது. இதைப் பார்க்கும்போது பகைவர்கள் விட்ட அம்பால் இந்த வீரன் உயிரிழந்த செய்தியை அறிய முடிகிறது.

இக்கல்லில் உள்ள எழுத்துகளும் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவையாகும். பல்லவர் ஆண்ட தொண்டை மண்டலம் என்பது பெரிய நிலப்பரப்பாகும். அதற்கு உட்பட்ட பகுதியே பங்கள நாடாகும். அந்த பங்கள நாட்டில்தான் ஜவ்வாதுமலைப்பகுதியும் இருந்துள்ளது என்பதை இக்கல் மூலம் அறிய முடிகிறது.

கி.பி. 1-ம் நூற்றாண்டில் சங்க நூல்களில் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமில் ஜவ்வாது மலையில் உள்ள 2 இடங்கள் பதிவாகியுள்ளன. பல்லவர் காலத்தைச் சேர்ந்த இந்த நடுகற்கள் சங்க காலத்துக்கு சற்று ஏறக்குறைய 600 ஆண்டுகள் பிந்தையதாகும். மேலும், பல்லவர் காலத்தில் நாட்டுப் பிரிப்பு முறைகளை இக்கல்வெட்டுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

பல்லவர்கள் ஆண்ட ஒட்டுமொத்தப் பகுதிக்கும் தொண்டை மண்டலம் என்று பெயர் இருந்தாலும் இங்கு தொண்டை மண்டலம் எனக் குறிப்பிடப்படவில்லை. மண்ணில் புதைந்தவாறு காணப்படும் நடுகல்லில் 2 வரிகள் மட்டுமே வெளியே தெரிகிறது. இதன் நீளத்தைக் கணக்கிட முடியவில்லை. கல்லின் அகலம் 36 செ.மீ. ஆகும். அதேபோல, படுத்த கோலத்தில் உடைந்த நிலையில் ஒரு கல் உள்ளது. இதைப் பற்றிய செய்திகளையும் அறிய முடியவில்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க இதுபோன்ற நடுகற்களை மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறையினர் உரிய முறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x