

புதுச்சேரியில் கைதிகளுக்கு கரோனாவால் பரோல், சிறையில் பார்வையாளர் அனுமதி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்த தண்டனை கைதி, பாதுகாப்புக்கு சென்ற சிறை வார்டனுக்கு காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டது. தண்டனை கைதிகள் அடைக்கப்பட்ட வார்டில் உள்ள பிற கைதிகளுக்கும் உடல்வலி, சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து, பரிசோதித்ததில் சிறை துணை கண்காணிப்பாளர், 2 வார்டர்கள், 41 தண்டனை கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கைதிகள் அனைவரும் அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வார்டர்கள் இருவரும் மற்றும் துணை கண்காணிப்பாளரும் கோவிட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், கரோனா அதிகரிப்பால், மத்திய சிறையில் பரோல், பார்வையாளர்கள் அனுமதி ரத்தாகியுள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவித்தனர். அத்துடன் சிறையில் முகக்கவசத்துடனும், தனிமனித இடைவெளியுடனும் இருக்க கைதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
தனியார் மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச்சையில் 41 தண்டனை கைதிகள் உள்ளதால், சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸார் மற்றும் போலீஸார் கடும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி முழுக்க போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கடும் கண்காணிப்பில் உள்ளது.