Published : 22 Apr 2021 02:58 PM
Last Updated : 22 Apr 2021 02:58 PM

நீலகிரியின் முன் மாதிரி பசுமைத் தொழிற்சாலைகளாக மாறும் தேயிலைத் தொழிற்சாலைகள்

பசுமைத் தொழிற்சாலைகளாக மாறும் தேயிலைத் தொழிற்சாலைகள்.

கோத்தகிரி

சூழலியல் பாதுகாப்பின் முன் மாதிரியாக நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளை பசுமைத் தொழிற்சாலைகளாக உருமாறியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய தேயிலைத் தொழில் கூட்டுறவு அமைப்பாக செயல்பட்டு வருகிறது 'இன்ட்கோசர்வ்' (INDCOSERVE) அமைப்பு. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

ஆங்கிலேயர்களால் இம்மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பணப்பயிர்களில் ஒன்று தேயிலை. தேயிலை தூள் உற்பத்தி செய்யவும் அதிகளவு மரங்கள் விறகாக எரிக்கப்படுகின்றன. இதனால் மலைப்பகுதியின் பாரம்பரிய மரங்களும், புற்கள் இனங்களும் அழிந்து வருவதாக, சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால், அரசு தேயிலைத் தோட்டங்கள் வனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 'இன்ட்கோசர்வ்' கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டு தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் அதன் வளாகத்தைச் சூழலியலோடு ஒத்த தன்மையுடன் மாற்றும் முன்மாதிரி பணியில் களமிறங்கி இருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து கட்டபெட்டு 'இன்ட்கோசர்வ்' தொழிற்சாலையை விரிவுபடுத்தி, அதன் வளாகம் பசுமையாக காட்சியளிக்க இயற்கை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலிருந்து கற்களால் செதுக்கப்பட்ட வனவிலங்குகளின் உருவங்கள் கொண்டு வரப்பட்டு, அதனை வர்ணம் தீட்டி தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், சிறுத்தை, கரடி, மான் உட்பட பறவை இனங்களின் உருவங்கள் மற்றும் காட்சி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புது முயற்சி குறித்து, 'இன்ட்கோசர்வ்' தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரியா சாஹூ கூறும்போது, "தேயிலைத் தூள் தயாரிக்க அதிகளவு மரங்களை எரிக்க வேண்டியுள்ளது. இதிலிருந்து வெளியேறும் புகையும் சாம்பலும் அருகில் உள்ள நீரோடைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இதனை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

முதல் முயற்சியாகத் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், கட்டபெட்டு மற்றும் மகாலிங்கா ஆகிய இரண்டு தொழிற்சாலை வளாகத்தில் ஆக்கிரமித்துள்ள களைத்தாவரங்களை அகற்றிவிட்டு, நீலகிரி மலைப்பகுதியின் பூர்வீக மரங்களை மரங்களை நடவு செய்கிறோம்.

இதோடு, நீலகிரியின் பூர்வீக புல் வகைகளையும் நட்டுள்ளோம். இந்தப் பகுதியில் காணப்படும் பறவைகளை ஓவியமாக வரைந்துள்ளோம். இதை காண்பதற்கு தொழிற்சாலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைக்கிறோம். இதன் மூலமாக சூழலியல் சார்ந்த நேர்மறை மாற்றங்களை முன்னெடுத்து வருகிறோம்" என்றார்.

கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் இந்தச் செயல், சூழலில் ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x