Published : 22 Apr 2021 02:37 PM
Last Updated : 22 Apr 2021 02:37 PM

தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அபராதம்: போலீஸாருக்கு முதன்மைச் செயலர் உத்தரவு

கரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறும் தலைமைச் செயலக ஊழியர்கள், முகக்கவசம் இன்றி வந்தால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என போலீஸாருக்கு முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிகபட்சமாக நேற்று 11,681 பேரும், சென்னையில் அதிகபட்சமாக 3,750 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்றைக் குறைக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, முகக்கவசம் கட்டாயம், அணியாவிட்டால் ரூ.200 அபராதம், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி சமூக விலகலின்றி இருந்தால் 500 ரூபாய் அபராதம், எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் மாநில அரசின் முக்கியமான தலைமை அலுவலகமான தலைமைச் செயலகத்தில் சட்டம் இயற்றக்கூடிய வளாகத்திலேயே அனைத்து விஷயங்களும் காற்றில் பறக்கவிடும் வகையில் முகக்கவசமின்றி நடப்பது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை ஊழியர்களே மீறி நடப்பதாக அதிகாரிகளிடம் புகார் சென்றது.

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் தலைமைச் செயலகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டால் அது மாநிலம் முழுவதுமான பணியை பாதிக்கும் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மைச் செயலர் செந்தில்குமார், சென்னை தலைமைச் செயலக செக்யூரிட்டி பிரிவு துணை ஆணையருக்கு அனுப்பியுள்ள உத்தரவில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

''தலைமைச் செயலக ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கரோனாவைப் பரப்பும் வகையில் செயல்படுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. முதற்கட்டமாக தலைமைச் செயலகம் வரும் ஊழியர்கள், பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

அணியாமல் நடமாடுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் எடுக்கலாம்'' என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x