Published : 22 Apr 2021 12:42 PM
Last Updated : 22 Apr 2021 12:42 PM

வெக்கையாகவும் இயல்புக்கு மாறாகவும் வியர்க்கும்: கடலோர மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று (ஏப்ரல் 22) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அடுத்த 3 நாட்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை மற்றும் வெளிர் வண்ணக் கதர் ஆடைகளை அணிவது சிறந்தது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு சென்டி மீட்டரில்:

சிவலோகம் (கன்னியாகுமரி) 4, சித்தார் (கன்னியாகுமரி) 3, கோவில்பட்டி (தூத்துக்குடி) 2, குழித்துறை (கன்னியாகுமரி) 1 செ.மீ.''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x