

தமிழகத்தில் கரோனா பரவல் 11,000 ஐ கடந்துள்ளது, ஆக்ஸிஜன், தடுப்பூசி மற்ற மாநிலங்களில் பற்றாகுறை உள்ளதாக தகவல் வரும் நிலையில் தலைமைச் செயலர் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
இந்திய அளவில் கரோனா தொற்றின் தாக்கம் 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 15 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. உலக அளவில் பதிவான உயர்ந்தபட்ச எண்ணிக்கை இது. இதேபோன்று இந்தியாவில் மஹாராஷ்டிரா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கைகள் கிடைக்கவில்லை, ரெம்டெசிவிர் மருந்து, ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்த கேள்வி எழுந்த்கு வருகிறது. வட மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழகத்தில் போதிய ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது என நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிகபட்சமாக நேற்று 11,681 பேருக்கும், சென்னையில் அதிகபட்சமாக 3750 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை என்கிற நிலையில் நேற்று முன் தினம் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. ஆனாலும் கோவிஷீல்டு மருத்துகளுக்கு டோஸுக்கு 400 ரூபாய் நிர்ணயித்துள்ளது சீரம் நிறுவனம்.
தமிழகத்தில் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடு, தளர்வு, கரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்து இன்று மீண்டும் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலர், வருவாய்த்துறை ஆணையர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.