

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றின் அன்றாட பாதிப்பு அகில இந்திய அளவில் 3 லட்சத்தைக் கடந்திருக்கிறது. தலைநகர் டெல்லியில் 35000 க்கு மேல் தினசரி தொற்று எண்ணிக்கை பெருகி வருகிறது.
இரண்டாவது அலையின் கோரம் இளம் வயதினரை அதிகம் பாதித்து உயிர்பலியை அளிக்கிறது. டெல்லி, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதித்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற படுக்கை, ஆக்ஸிஜன் வசதி இன்றி உயிரிழக்கும் நிலை உள்ளது.
கரோனாவின் கோரப்பிடிக்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனும் அளவுக்கு தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு கரோனா தொற்று குறித்து அரசை விமர்சித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை.
சீதாராம் யெச்சூரியின் 34 வயது மகன் ஆசிஷ் யெச்சூரி கோவிட் காரணமாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் மரணமடைந்தார். சென்னையில் இருக்கும் ஏசிஜே இதழியல் கல்லூரியில் பயின்ற அவர் ஆங்கிலப் பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
“ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்தக் கடினமான நேரத்தில் தோழர் சீதாராம் யெச்சுரிக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.