இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதை வேடிக்கை பார்த்த இந்திய கடற்படை: தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு

இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதை வேடிக்கை பார்த்த இந்திய கடற்படை: தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கச்சத்தீவு அருகே சனிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தபோது, இந்திய கடற்படையினர் வேடிக்கை பார்த்ததாக மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் சனிக்கிழமை கடலுக்குச் செல்ல 304 படகுகளின் உரிமையாளர் மட்டுமே டோக்கன்கள் வாங்கினர். ஆனால் 100-க்கும் குறைவான விசைப்படகுகளே சனிக்கிமை கடலுக்குச் சென்றனர்.

சனிக்கிமை இரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் இது இலங்கைக்கு உள்பட்ட கடற்பகுதி. இங்கே இந்தியர்கள் மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்று கூறி எச்சரித்து, மீனவர்கள் மீது கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் உயிருக்கு பயந்து மீனவர்களில் சிலர் விரைவிலேயே கரை திரும்பினர். மற்றவர்கள் வழக்கத்துக்கு மாறாக வேறிடத்தில் மீன் பிடித்ததால், சரியான மீன் பாடின்றி ஏமாற்றத்துடன் ஞாயிற்றுக் கிழமை கரைக்கு திரும்பினர்.

தாக்குதல் சம்பவம் குறித்து மீனவர்கள் கூறியதாவது: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது 7 இலங்கை ரோந்துக் கப்பல்கள் நின்றன. அதில் இருந்த இலங்கை கடற்படையினர் இங்கே மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்து கற்கள் மற்றும் சோடா பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் நடந்தபோது, இந்திய கடற்படைக் கப்பல்களும் அருகிலேயே இருந்தன. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in