Published : 22 Apr 2021 03:13 AM
Last Updated : 22 Apr 2021 03:13 AM

மின்னணு இயந்திரங்கள் மீது தொடர்ந்து சந்தேகம் எழுப்பும் அரசியல் கட்சிகள்- கால்குலேட்டர் போன்றதுதான்; ‘ஹேக்’ செய்ய முடியாது என்கிறது தேர்தல் ஆணையம்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

சென்னை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பும் நிலையில், அவை கால்குலேட்டர் போன்றவைதான். யாரும் அவற்றை ‘ஹேக்’ செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஏப்.6-ம் தேதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 76 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. ‘ஸ்டிராங்’ அறையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு துணை ராணுவம், காவல்துறை மூலம் 3 அடுக்கு பாதுகாப்பு, அனைத்து பகுதிகளும் ரகசிய கேமராக்கள் மூலம்கண்காணிப்பு மற்றும் வேட்பாளர்களின் முகவர்களின் கண்காணிப்பு என மிகுந்த பாதுகாப்பில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அத்தியாவசிய பணிகளுக்கான நிகழ்வுகள்கூட, அரசியல் கட்சிகளின் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. அவற்றுள் சிலவற்றை காண்போம்:

ஏப்.13-ம் தேதி, கோவை ஜிசிடிகல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு அறை வளாகத்தில் வந்த கன்டெய்னரால் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், அது பெண் காவலர்களுக்கான நகரும் கழிப்பறை வாகனம் என்பதை திறந்து காட்டிய பின்னரும், வேட்பாளர்கள் நம்பாததால் வாகனம் திருப்பியனுப் பப்பட்டது.

14-ம் தேதி, ஆவடி தொகுதிக்குரிய இயந்திரங்கள் வைக்கப்பட் டுள்ள திருவள்ளூர் பெருமாள்பட்டு ராம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறை அருகில் நள்ளிரவில் கன்டெய்னர் வாகனம் வந்தது. அந்த வாகனத்தை நிறுத்திய திமுக வேட்பாளரின் முகவர்கள், அது நகரும் கழிப்பறை என்று தெரிந்த நிலையிலும், அனுமதிக்காமல் திருப்பியனுப்பினர்.

16-ம் தேதி, சென்னை லயோலாகல்லூரி வளாகத்திலும் இதுபோன்று நகரும் கழிப்பறை கொண்டு செல்லப்பட்ட நிலையில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வாகனம் அங்கிருந்து அகற்றப்பட்டது.

ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மடிக்கணினியுடன் 31பேராசிரியர்கள் சென்றனர். பல்வேறு கட்சியினரின் எதிர்ப்பால் மாவட்ட ஆட்சியரே நேரில் வந்துஅவர்களை வேறு இடத்தில் பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். இதுபோன்று மதுரையிலும், மடிக்கணினியுடன் சென்ற கல்லூரிபணியாளர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நெல்வாய் ஏசிடிகல்லூரியில் இருந்த வைஃபை வசதி மீது சந்தேகப்பட்ட வேட்பாளர்கள் போராட்டம் நடத்தியதால் அகற்றப்பட்டன.

20-ம் தேதி, விருத்தாச்சலத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகில் பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு தேங்காய் நார்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்குவந்த திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கிருந்து அந்த வாகனம் அகற்றப்பட்டது.

அதேபோல், ஒருசில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் உள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவன ‘டிஷ்’ ஆன்டெனாக்கள் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தால் அகற்றப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.

மேலும், பல்வேறு வாக்கு எண்ணிக்கை மையங்களின் அருகில்வைஃபை திடீரென இயங்குவதாகவும், இதனால் இயந்திரங்களின்பாதுகாப்பு கேள்விக்குறியாவதா கவும் தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது. மக்கள்நீதி மய்யம் சார்பில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் கமல் புகார் அளித்தார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் அருகில் வைஃபை வசதிகள், மடிக்கணினி கொண்டு செல்வதன் மூலம், இயந்திரங்களில் உள்ள வாக்குகளை மாற்ற வாய்ப்புள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாக்குப்பதிவுஇயந்திரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

ஆனால், தேர்தல் ஆணையம்ஏற்கெனவே பல்வேறு காலகட்டங்களிலும் இயந்திரங்களின் மீதானசந்தேகங்களை தீர்த்துள்ளது. குறிப்பாக எந்தவித ரேடியோ அலைகள், வைஃபை சாதனங்களால் அந்த இயந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று கூறும்போது, ‘‘கன்டெய்னர்கள், வைஃபை இயக்கம் உள்ளிட்ட புகார்கள் குறித்து மாவட்ட தேர்தல்அதிகாரிகளின் அறிக்கைகளை பெற்றுள்ளோம். அவை தேர்தல்ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன’’ என்றார்.

முன்னதாக, இதுபோன்ற சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கால்குலேட்டர் போன்றவைதான். அவற்றை எந்த வகையிலும் யாரும் ‘ஹேக்’ செய்ய முடியாது’’ என்றும் விளக்கம் அளித்தார்.

இருப்பினும் வெற்றி, தோல்விக்கு ஒருசில வாக்கு வித்தியாசமே போதும் என்பதால், பல்வேறு கட்சியினருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களேஇருக்கும் நிலையில், இதுபோன்ற சர்ச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x