2020-21 நிதியாண்டில் புதிய பாலிசிகள் மூலம் எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.1.84 லட்சம் கோடி வருவாய்

2020-21 நிதியாண்டில் புதிய பாலிசிகள் மூலம் எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.1.84 லட்சம் கோடி வருவாய்
Updated on
1 min read

கடந்த 2020-21-ம் நிதி ஆண்டில், கரோனா பேரிடர் ஏற்பட்ட நிலையிலும் புதிய பாலிசிகள் மூலம் எல்ஐசி நிறுவனம் ரூ.1.84 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

எல்ஐசி நிறுவனம் 2020-21 நிதியாண்டில், முதல் ஆண்டு பிரீமியமாக, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.56,406 கோடி ஈட்டியுள்ளது. இது 10.11 சதவீத வளர்ச்சியாகும். அத்துடன் 2.10 கோடி பாலிசிகளை பெற்றுள்ளது. இதில், 46.72 லட்சம் பாலிசிகள் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் பெறப்பட்டுள்ளன.

மேலும், ஓய்வூதியம் மற்றும் குழு காப்பீட்டுத் திட்ட பாலிசிகள் மூலமும் எல்ஐசி நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ரூ.1 லட்சத்து 27,768 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இது ரூ.1 லட்சத்து 26,749 கோடியாக இருந்தது.

இதேபோல், எல்ஐசி அறிமுகப்படுத்திய எஸ்ஐஐபி மற்றும் நிவேஷ் பிளஸ் ஆகிய இரு யூலிப் திட்டங்களில், 90 ஆயிரம்பாலிசிகளை விற்பனை செய்து, ரூ.800 கோடி பிரீமியத் தொகையாக ஈட்டியுள்ளது.

கரோனா தொற்று பரவலுக்குமத்தியிலும், எல்ஐசி 2.19 கோடிமுதிர்வு அடைந்த பாலிசிகள், மணிபேக் உள்ளிட்ட பாலிசிகளுக்கு முதிர்வுத் தொகையாக ரூ.1.16 லட்சம் கோடியும் 9.59 லட்சம் இறந்த பாலிசிதாரர்களுக்கு இழப்பீடாக ரூ.18,137 கோடியும் வழங்கியுள்ளது.

மொத்தத்தில், எல்ஐசி நிறுவனம் ரூ.1.84 லட்சம் கோடி புதிய பிரீமியத் தொகை ஈட்டியுள்ளது. அதேபோல், இறந்தவர்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி க்ளெய்ம் வழங்கி உள்ளது.

இதனை அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in